Thursday, 27 July 2017

“பக்கச்சார்பு மிகவும் அவசியமானது” Vs “பக்கச்சார்பு என்பது வால்பிடித்தல்.”


முர்சித் முகம்மது

நடுநிலைமை என்பது நடைமுறைக்கும் நீதிக்கும் பொருத்தமில்லாத வெறும் வார்த்தையாகும், நடுநிலைவகித்தல் பெண்ணுடைய சந்தர்பங்களை பலயீனப்படுத்துகின்றது...



தனிநபரோ அல்லது ஏதேனும் அமைப்போ தமது கருத்துக்கள் மற்றும் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் போது இரண்டு வார்த்தைகளால் அவை எடைபோடப்படுகின்றன. அவற்றை அடிப்படையாகக் கொண்டே குறித்த கருத்திற்கும் அதை வெளிப்படுத்திய தரப்பிற்குமான பெறுமானம், பெறுமதி நிர்ணயிக்கப்படுவதோடு அதனை ஏற்றுக்கொள்வதா அல்லது உதாசீனம் செய்வதா என்பன தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றமை நிதர்சனமான உண்மை. அவைதான்
நடுநிலைமை
• பக்கச்சார்பு
 இவை தொடர்பில் நடுநிலமை என்றால் நீதி என்றும் பக்கச்சார்பு என்றால் அநீதி என்றும் பொதுவான கருதுநிலை இருப்பினும் , பல்தரப்பட்ட மக்கள் மத்தியில் இந்த வார்த்தைகளின் புரிதல் எவ்வாறுள்ளது? இதை அறிந்து கொள்வதற்காக பல்தரப்பட்டவர்களையும் த கட்டுமரத்திற்காக அணுகினோம்.





ஜடாக்டர் ஏ.எம்.ஜாபிர். (63).

இளைப்பாறிய அரச பதிவு வைத்திய அதிகாரியான இவர், இலங்கையின் கிழக்குமாகாணம் நிந்தவூர் பிதேசத்தில் வசித்துவருபவர், வாசிப்பு, கலை, இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.




பக்கச் சார்பு :
“இரு சாரார் சார்ந்த ஒரு பிரச்சினைக்கு, ஏதோ ஓர் ஈர்ப்பினிற்குட்பட்டு உண்மையை ஓரமாக்கி ஒரு பக்கம் சார்ந்து தீர்வை அடைதல் பக்கச் சார்பு எனப்படும். இது இப்போது தாராளமாகக் காணக் கிடைக்கும் மலிவான ஒரு விடயமாகும்.”

நடு நிலைமை:
“இரு சாரார் சார்ந்த ஒரு பிரச்சனைக்கு, யதார்த்த நிலைமைகளை ஆராய்ந்து உண்மையை சாட்சியாக வைத்து சரியான தீர்வை அடைதல் நடு நிலைமை எனப்படும். இப்போதெல்லாம் இது காணக் கிடைக்காத அரிதான ஒரு விடயமாக இருக்கின்றது.”



(மயில்வாகனம் திலகராஜா(43
இலங்கையின் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரான இவர் பரந்துபட்ட சமூக சேவைகள் மட்டுமன்றி, “மல்லிகைப்பூச் சந்தி” திலகர் எனும் பெயரில் கவிதைகள், கட்டுரைகள் உள்ளிட்ட எழுத்துத்துறைசார்ந்தும் செயற்படக்கூடிய பிரபலமான எழுத்தாளர், ஆய்வாளர் மற்றும் பேச்சாளராகவும் இருப்பதோடு அரசியல், சமூகம் மற்றும் இலக்கியம் சார்ந்து நிறையவே ஏழுதியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.


பக்கச் சார்பு :
தான் சார்ந்திருக்கும் அமைப்பு, ஒரு கருத்து அல்லது செயற்பாடு தொடர்பில் கொண்டிருக்கும் நிலைப்பாடு அல்லது பிழையான தீர்மானம் என தெரிந்தும் அதனை ஆதரித்து பேசுவதும், எதிர்தரப்பு என்பதற்காக அவர்கள் கூறும் உண்மையான கருத்தையும் மறுத்தலும் ‘பக்கசார்பு’.

நடுநிலைமை :
தான் சார்ந்திருக்கும் அமைப்பு, ஒரு கருத்து அல்லது செயற்பாடு தொடர்பில் கொண்டிருக்கும் நிலைப்பாடு அல்லது பிழையான தீர்மானம் என தெரியும்போது அதனை அப்படியே ஆதரிக்காது அதன் நியாயபூர்வதன்மையை உணர்ந்து அதனை அணுகுவதும் எதிர்த்தரப்பினர் முன்வைக்கும் கருத்தாயினும் அதில் நியாயபூர்வதன்மை இருப்பதை உணர்ந்தால் அதனை வரவேற்பது ஏற்றுக்கொள்வது ‘நடுநிலைமை’.



றியஸ் குரானா (41),
இவர் தொழில் ரீதியில் தனியர் நிறுவனம் ஒன்றின் விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றும் அதே வேளை தமிழ் மொழிச்சூழலில் முக்கியமான எழுத்தாளராகவும், விமர்சகராகவும் பின்நவீன எழுத்துச் செயற்பாட்டாளராகவும் அறியப்படுகிறார், ஐந்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கும் இவர் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்.





பக்கச்சார்பு :
“பக்கச்சார்பு மிகவும் அவசியமானது. இது விளிம்புநிலை மக்களின் பக்கமாக சார்ந்து பேசுதல், செயற்படல் போன்ற நிலைகளை குறிப்பிட முடியும் ஆனால் இது சாதாரண மக்கள் மத்தியில் தறான சொல்லாக சித்தரிக்கப்பட்டுள்ளது.”

நடுநிலைமை :
“ நடுநிலைமை என்பது புத்திஜீவிகள் மத்தியில் உலாவுகின்ற மிகவும் மோசமான சொல், இது 20 ஆம் நூற்றாண்டுடன் போஸ்ட்மொடனால (பின்நவீனம்) அழிக்கப்பட்டயமாகும். இன்றைய சூழலில் இதன் பயன்பாடும் விரும்பத்தகாதது.”



(நபீஸ் முஹம்மட் (38 
இவர் இலங்கையின் கண்டி-மடவளையைச் சேர்ந்தவர், சுமார் எட்டு வருடங்களாக ஐரோப்பிய நாடுகளில் பல்லின மற்றும் பல்தேசிய சமூகங்களின் மத்தியில் பணிபுரிந்துவிட்டு இப்போது சொந்த ஊரில் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் குடும்பஸ்த்தர், சுயாதீன ஊடகவியலாளராகவும் செயற்படுகிறார்.




பக்கச்சார்பு :
“சொந்த இலாபம் கருதி தான் சார்ந்த, தனக்கு விருப்பமான தரப்பினருக்கு மட்டுமே சார்பாக செயற்படுதல், கருத்துச் சொல்லுதல் பக்கச்சார்பு எனப்படும்”

நடுநிலைமை :
“வார்த்தையில் மட்டும் உள்ளதும் அதற்குப் பொருளோ வரைவிலக்கணமோ சொல்லமுடியாததுமான போலியான பாசாங்கிற்கு வார்த்தையே நடுநிலைமை”


முபாறக் அப்துல் மஜீத்(57)
இவர் இலங்கையின் கிழக்கு கல்முனைப் பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் மார்க்க அறிஞர் மட்டுமல்லாது அனைத்து மதத்தலைவர்களுடனும் நட்புரீதியான பரஸ்பர உறவைக்கொண்டுள்ளவர், முஸ்லி;களின் புனித நூலான திருக்குர்ஆனை தமிழுக்கு மொழிபெயர்த்தவர்களில் முக்கியமானவர். முஸ்லிம் மார்க்க அறிஞர்களின் வழிகாட்டலில் நடாத்தப்படும் “இலங்கை உலமா கட்சி” எனும் அரசியல் கட்சிக்கும் தலைவராக தன்னை ஒரு கொள்கை அரசியல்வாதியாகவும் அடையாளப்படுத்தியிருக்கிறார்.

பக்கச்சார்பு :
“உண்மை எது என்று தெரிந்த நிலையிலும் மாற்றுக் கருத்துக் கொண்டவர் தனக்கு விருப்பமானவரா எதிரானவரா என்று பார்த்து தனக்குச்சாதகமாகச் செயற்படுவது பக்கச் சார்பு”

நடுநிலைமை :
இஸ்லாத்தின் பார்வையில் இது நல்லதுக்கும் தீயதுக்கும் இடைப்பட்டதல்ல, நல்லதை நல்லதென்றும், தீயதை தீயது என்றும் சொல்வதுதான் நடுநிலைமை.

இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம் (43),
அனார் என்ற பெயரில் நீண்டகாலமாக கவிதைகள் உள்ளிட்ட எழுத்துச் செயற்பாடாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இவர், தமிழ் சூழலில் முக்கியமான பெண்படைப்பாளி, நவீன மொழியின் அடையாளமாகவும், கவிதைக்கான அரச சாஹித்ய விருது பெற்ற முதல் முஸ்லீம் பெண்ணாகவும் இருக்குமிவர் நான்கு கவிதை தொகுப்புகளையும், நாட்டார் பாடல் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது.

பக்கச்சார்பு:
தான் அரசியல் சார்ந்து தன்நிலையோடு ஒருவர் செயற்படுவாரானால் அதுவே பக்கச்சார்பு அதாவது அதிகாரம் பிரயோகிக்கப்படும் ஒரு சூழலில் அதற்கெதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதும் விளிம்பு நிலை மக்கள் மீது மேலாதிக்கம் செலுத்தப்படுகையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நமது அற உணர்வை, நீதியை கோரி குரல் கொடுப்பதும் பக்கச்சார்பாகும், இது முக்கியமான சொல்லும் செயல் நிலையுமாகும்.

நடுநிலைமை:
“ நடுநிலைமை என்பது நடைமுறைக்கும் நீதிக்கும் பொருத்தமில்லாத வெறும் வார்த்தையாகும், நடுநிலைவகித்தல் பெண்ணுடைய சந்தர்பங்களை பலயீனப்படுத்துகின்றது, எல்லோருக்கும் பொருத்தமான நடுநிலமை என்ற ஒன்று இல்லை அதிகாரம் பிரயோகிக்கப்படும் சூழலில்.. பெண் நடுநிலமைவகித்தல் அவளை மேலும் பின்தள்ளும்”


வீ.ரீ.எம் இம்றாத்(25).
இவர் கிழக்கு மாகாணம், பொத்துவில்லை பிறப்பிடமாகக் கொண்டவர், தற்போது ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மூன்றாமாண்டு மாணவனாக இருக்கிறார், சமூகம் சார்ந்த சிந்தனைகள் மற்றும் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.



பக்கச் சார்பு :
“ பக்கசார்பு ஒரு போதை நிலை. தர்க்க ரீதியான சிந்தனைகளோடு சமாந்தரமாக பயணிக்க முடியாத ஒரு நிலைப்பாடு. ஆனால் இந்நிலைப்பாடு நடுநிலைமை என்பதை விட பெறுமதியானது. இங்கு ஏதோ ஒரு தேடலும் ஏதோ ஒரு இலட்சியமும் இருக்கின்றது.”

நடுநிலைமை :
“நடுநிலைமை என்று ஒரு நிலைப்பாடே கிடையாது. அது ஒரு மேட்டுக்குடி போர்வை, ஒரு வகை சுயநல வார்த்தை”



பாத்திமா ஸிமாரா அலி (32)
5 குழந்தைகளின் தாயான இவர் ஒரு பாடலாலை ஆசிரியராவர். சமூகப்பணிகளில் அதிக ஆர்வம் கொண்டு செயற்படுவதோடு இலக்கியம் சார்ந்து கவிதை எழுதுதல் போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பித்தக்கது.இவர் கொழும்பு கொலனாவ பகுதில் வசித்துவருகின்றார்.




பக்கச்சார்பு:
“ பக்கச்சார்பு என்பது வால் பிடித்தல்.தன்னை இழிவு படுத்தில்கொண்டு தன் தேவையை நிறைவேற்ற எந்த நிலைக்கும் போகக் கூடிய ஒரு நிலைமை.”

நடுநிலைமை:
“மனசாட்சி. அதற்கு விரோதம் இல்லாமல் நடப்பதையே நான்மனசாட்சி என்பேன்.இன்று பலரிடம் காணாமல் போன ஒன்று மனசாட்சி அதாவது நடுநிலைமை”

வரதராஜன் பெருமாள்(63)
பொருளியல்த்துறை வல்லுனரான இவர் ஈழப்போராட்டத்தில் தன்னை இனைத்துக்கொண்டு பிற்பட்ட காலத்தில் அரசியல் நீரோட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இனைந்த வடகிழக்கின் முதலும் கடைசியுமான முன்னாள் முதலமைச்சராக இருந்தவருந்தவர்.
தமிழ் சமூகத்தின் தீவிர அரசியல் செயற்பாட்டாளராக அறியப்படுபவர்.

பக்கச்சார்பு :
“பக்கச்சார்பு என்பது நடுநிலைமை என்பதற்கு எதிரான கருத்தைக் கொண்டது. (அநீதியின் வரம்பிற்குள் அல்லது நீதியின் வரம்பிற்கப்பால் நின்று செயற்படுதலாகும்)”

நடுநிலைமை:
“(இது தொடர்பில் மொழியலாளர்களின் கருத்தே பொருத்தமானதாகும் எனது புரிதல்) நீதியின் வரம்பிற்குட்பட்டு செயற்படுதல் நடுநிலைமையாகும்.”

ரேவதி (49)
இவர் இந்தியா தமிழ்நாட்டைச் சேர்ந்த திருநங்கை, பெங்களூரில் உள்ள SANGAMAஎன்ற NGO வில் கடந்த ஏழு வருடங்களாக Sexual Minorities(Trans women, Homo sexualities, Lesbians, Bi-sexualities)களிடையே அவர்களின் உரிமைக்காவும், பாலியல் சுதந்திரத்திற்காகவும் பணியாற்றியவர்.. சட்ட ரீதியாக போராடி தனக்கான சொத்துரிமையைப் பெற்றவர்…

தற்போது உடல் நலமில்லாத தன் தாயாரை உடனிருந்து கவனித்து வரும் இவர், சமீபத்தில் பல திருநங்கைகளின் வாழ்க்கையை நேரடியாக பதிவு செய்து, பொது தளத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளூம் வகையில் உணர்வும் உருவமும் என்ற பெயரில் திருநங்கைகளின் வாழ்வு குறித்த சிறந்த பதிவாக புத்தகம் ஒன்றினை எழுதியுள்ளார்.

பக்கச்சார்பு:
“நீதி நியாம் என்பவெற்றுக்கு அப்பால் சென்று மனச்சாட்சிக்கு விரோதமாக எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் கருத்துக்களை பக்கச்சார்வு என்று சொல்லலாம்.”

நடுநிலைமை:
“ நியாயம் மற்றும் தர்மத்தை மனதில் முன்நிறுத்தி எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் கருத்துக்களை நடுநிலைமை என்று சொல்லலாம்”

இவ்வாறு அவர்களின் கல்வி நிலை, தெழில், வாழும் சூழல், நம்பிக்கைகள், கொள்கைகள், வாசிப்பு மற்றும் தேடல்கள் உள்ளிட்ட பல விடயங்களின் தாக்கங்களுடன்; பக்கச்சார்புக்கும் நடுநிலைமைக்கும் விளக்கம் கூறினர்.
தற்காலத்தில இலங்கையைப் பொருத்தவiர் அரசியல் ரீதியிலான பணிப்போர் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் உக்கிரமடைந்து வரும் நிலையில் அவற்றை ஊடக மற்றும் எழுத்துச்செயற்பாடுகள் மூலமாகவே சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்கள் மக்களைச் சென்றடைகின்றன. குறித்த கருத்துக்கள் மற்றும் செய்திகளை உள்வாங்கிக் கொள்வதில் மேற்குறிப்பிடப்பட்ட கருத்து நிலைகள் பெரிது தாக்கம் செலுத்தக்கூடியதாகவுள்ளன.

No comments:

Post a Comment