Sunday, 23 August 2026

புலர்ச்சியின் நிழலில்

புலரும் பகலையும் கடந்து
இரவின் கருமையைத் தழுவி
வழிந்தோடும் நினைவுகள்
உன்னை சாம்பல் நிற 
பூனைக்குட்டியாய் மாற்றி
எனது கனவுகளின் தோட்டத்தில்
மெது மெதுவாய் பதுங்கி
பூக்களின் தேனைத் தேடியலையும் 
 அழகு மிகு பூச்சிகளின் இருப்பை 
என்னில் வெறுமையாக்குகிறது

நிலவொளியில் குளித்த உன் நிழல்
என் இதயத்தில் படர்ந்து
துக்கத்தின் ஓசையை எழுப்பி
அமைதியை கலைத்து விடுகிறது
கனவு அவிழ்ந்து எழுந்ததும்
உன் நினைவுகள் மீண்டும் வந்து
என்னை துன்புறுத்தி, வாழ்க்கையின் அர்த்தத்தை கேள்விக்குறியாக்குகிறது.

#முர்ஷித்


இலவசம், உதவி என்ற பெயரில் ஊனமாக்கும் சமூக சேவைகள்: சிந்திக்க வேண்டிய நிமிடம்



-முர்ஷித்

இலங்கையின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வரலாறு பல்வேறு சிக்கல்களைக் கொண்டுள்ளது. 2004ஆம் ஆண்டு சுனாமி, 30 வருட உள்நாட்டு யுத்தம் மற்றும் அண்மையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி ஆகியவை நாடு முழுவதும் மக்கள் வாழ்க்கையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தின.


இவ்வாறான சூழ்நிலைகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் மீது பரிவும் பொறுப்பும் கொண்டு, பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகள் (NGOs) நிவாரணங்களை வழங்க ஆரம்பித்தன.

இது தொடக்கத்தில் தேவையான உதவியாக இருந்தாலும், காலப்போக்கில் இவை மனித வளத்தை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, 'இலவச மனப்பான்மையை' ஊக்குவிக்கும் ஒரு நிரந்தர நிலையை உருவாக்கி விட்டன.

 வரலாற்றுப் பின்னணி:

• 2004 சுனாமி: இலங்கையின் கிழக்கு மற்றும் தெற்குக் கரையோரங்களை பயங்கரமாக தாக்கியது. தாய்லாந்து, ஜப்பான், USAID, UNICEF போன்றவைகளின் மூலம் மாபெரும் நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

• உள்நாட்டு யுத்தம்: வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் பெருமளவிலான மக்கள் முகாம்களில் தங்கிவைத்தனர். இங்கு தொடர்ச்சியாக உணவு, உடை, கல்வி, உடல் நல சேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது.

• 2022 பொருளாதார வீழ்ச்சி: எரிபொருள், மருந்து, உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, உலக நிவாரண அமைப்புகள் மீண்டும் முன்வந்தன.

இந்த மூன்று முக்கிய இடையூறுகளும், நாட்டு மக்கள் மத்தியில் “தானாகவே வரக்கூடிய இலவச உதவி” என்ற ஒரு புலனற்ற நம்பிக்கையை நிலைநாட்டியுள்ளது.

தற்போதைய நிலை மற்றும் அதன் விளைவுகள்:

இலவச மனப்பான்மை வளர்ச்சி:

இன்றைய பிரதேச சுயஅரசுகளின் மதிப்பீடுகளின்படி, பல குடும்பங்கள் எந்த ஒரு செயற்பாட்டிலும் ஈடுபடாமல், மாதம்தோறும் உதவி பெறும் நிலைமை உள்ளன.

இலங்கை புள்ளியியல் திணைக்களம் 2023-இல் வெளியிட்ட அறிக்கையின் படி, மட்டக்களப்பு, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 40%-45% குடும்பங்கள் அரசு அல்லது தொண்டு நிவாரணங்களில்தான் சார்ந்துள்ளனர்.

உடல் மற்றும் மன அழுத்தங்கள்:

தொடர்ச்சியான நிவாரணத்தை எதிர்பார்ப்பது ஒரு வகை மன அழுத்தத்தை உருவாக்குகிறது. உடல் உழைப்பு இல்லாததால் பலர் நோயாளிகளாகவும், உளவியல் ரீதியில் பின்வாங்கிய நிலைக்கு செல்வதையும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

வேலை வாய்ப்பு மறுப்பு:

விவசாய வேலை, கட்டிட தொழில், சிறு தொழில் வாய்ப்புகள் உள்ளபோதும், இலவச உணவுக்கு மட்டுமே எதிர்பார்ப்புடன் காத்திருப்பது தற்போது ஒரு சமூக நோயாகவே மாறியுள்ளது.

சர்வதேச ஒப்பீடுகள்:

ஜப்பான் (World War II பின்):

அழிவுக்கு பின்னர், மக்கள் நலன் மீட்பு திட்டங்களில் மீன் பிடிக்க கற்றுக்கொடுத்தல், உழைப்புத் திட்டங்களை வழங்குதல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. “Give a man a fish, he eats for a day. Teach him to fish, he eats for a lifetime” என்ற கொள்கையையே நடைமுறைக்கு கொண்டு வந்தது.

வியட்நாம்:
போருக்குப் பின் மக்கள் வாழ்வாதார மேம்பாட்டிற்காக திறன் அபிவிருத்தி மையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

 தொழிற்சாலைகள், விவசாய மையங்கள் திறக்கப்பட்டன. தொழிலுக்கு பயிற்சி பெற்றவர்கள் தங்களையே அல்ல, பிறரையும் வேலைக்கொள்ளும் நிலைக்கு சென்றனர்.

ருவாண்டா:
1994 இனப்படுகொலையின் பின்னர், “community transformation projects” மூலம் வேலைவாய்ப்பு, தொழில் மேம்பாடு, உளவியல் சிகிச்சைகள் உள்ளிட்ட அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன.

தீர்வுகள் மற்றும் நடைமுறைப்படுத்த வேண்டிய வழிகள்:

 தன்னிறைவு அடையும் திட்டங்கள்:

• உதவி அளிக்கும்போது, அவற்றுடன் தொழில் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும்.

• பெண்களுக்கு வீட்டிலிருந்தே செய்யக்கூடிய சுண்டல் தயாரிப்பு, உலர் உணவுகள், துணி வேலைகள் போன்றவை ஊக்குவிக்கப்படலாம்.

• உதவியாளராக தொடங்கிய நபர், பிறகு வேலையளிப்பவராக மாறவேண்டும்.


 சமூக வலுவூட்டல் – Participation Based Development:

மக்களை தீர்மானக் கட்டங்களில் பங்கேற்க வைப்பது, திட்டங்களை நிலைபேருடையதாக்கும் வழியாய் அமையும். உதவிக்கு எதிராக வேலை செய்யும் திட்டங்கள் அமைய வேண்டும் (Cash-for-work models).

ஒருங்கிணைந்த அரசு-தொண்டு அமைப்புகள்:

• NGOக்கள் தங்கள் திட்டங்களை பிரதேச செயலகம்/அரச அமைப்புடன் இணைந்து செயல்படுத்த வேண்டும்.

• திட்டங்களுக்கு காலவரையறை, நபருக்கான வளர்ச்சி வழிகாட்டி (Exit Strategy) இருக்க வேண்டும்.

அரசாங்க பரிந்துரைகள்:

• NGO Registration & Monitoring Framework:
தேசிய மட்டத்தில் சீராக NGO செயற்பாடுகளை பதிவு செய்து, அவர்களின் செயற்பாடுகளை சமூக மாற்றம் அடிப்படையிலான தர அடிப்படையில் மதிப்பீடு செய்யும் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

• தன்னிறைவு அடையும் தரவுப் பெட்டி (Exit Database):
உதவிகள் பெறும் நபர்கள் சுயமாக எப்போது வெளியேறினார்கள் என்பதற்கான கண்காணிப்பு திட்டம்.

• அரச-தொண்டு அமைப்புகள் கூட்டுத்திட்டங்கள்:
“Livelihood 360” போன்ற திட்டங்களில், உணவு, தொழில், மனநலம், குழந்தை கல்வி உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

சுட்டிக்காட்டுகள் – மக்கள் குரல்:

• அமுதா (வவுனியா): “2005ல் நிவாரணம் பெற்றேன். இன்று என் வீட்டில் மசாலா பொருட்கள் தயாரிக்கிறேன். என் கணவர் வாகன ஓட்டுநர். நாங்கள் நிவாரணத்திற்கு இல்லை.”

• முகம்மது யூசுப் (மட்டக்களப்பு): “5 வருடமாக ஒரு NGO-வில் பயிற்சி பெற்றேன். இப்போது 3 பேருக்கு வேலை கொடுக்கிறேன்.”

சமூக சேவை என்ற பெயரில் வழங்கப்படும் உதவிகள், மக்கள் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான உந்துதலாக இல்லாமல், அவர்களை பின்வாங்கிய மனநிலைக்கு இட்டுச் செல்லக்கூடாது. உதவிகள் ஒரு தற்காலிக தாய்பால் மாதிரி; ஆனால் தன்னிறைவு என்பது நிலையான உணவாக இருக்க வேண்டும்.
உண்மையான சமூக சேவை என்பது, மக்கள் தங்களைத் தாங்களே முன்னேற்றும் பாதையில் செல்ல வழிகாட்டுவதாக இருக்க வேண்டும். அதற்கு இலவசங்களை வழங்குவதைவிட, செயல்படும் வாய்ப்புகளை உருவாக்குவதே சமூக மாற்றத்தின் சாவிதியாக அமையும்.

6.பெண்கள் தொழில் முனைவோரின் அமைதியான புரட்சி.Part 6.5 — எதிர்காலத்தை உருவாக்கும் பெண்கள்.

-முர்ஷித்

ஒரு பெண் தொழில் ஆரம்பிக்கும் போது,
அவர் வெறும் வருமானம் உருவாக்குவதில்லை.
அவர் எதிர்காலத்தையும் உருவாக்கத் தொடங்குகிறார்.

Industrial Development Board of Ceylon உடன் பணியாற்றிய பல ஆண்டுகளில் நான் மிகத் தெளிவாக உணர்ந்த ஒன்று
ஒரு woman entrepreneur-ன் தாக்கம், அவரது business-ஐவிட மிகப் பெரியது.

அவர்:

•ஒரு குடும்பத்தின் பொருளாதார பாதுகாப்பை மாற்றலாம்
•ஒரு குழந்தையின் கல்வி வாய்ப்பை உருவாக்கலாம்
•ஒரு சமூகத்தின் mindset-ஐ மாற்றலாம்
•மற்ற பெண்களுக்கு inspiration ஆகலாம்


இதுவே women entrepreneurship-இன் multiplier effect.

ஒரு முக்கியமான உண்மை என்னவெனில்,
பெண்கள் economic participation அதிகரிக்கும் போது, ஒரு நாட்டின் சமூக அமைப்பே மெதுவாக மாறத் தொடங்குகிறது.

ஏனெனில் women-led income பெரும்பாலும்:

•education
•nutrition
•healthcare
•family wellbeing

போன்ற துறைகளில் மீண்டும் முதலீடு செய்யப்படுகிறது.

இதனால் women entrepreneurs வெறும் business owners அல்ல.
அவர்கள் சமூக முதலீட்டாளர்கள்.

ஆனால் இன்னும் பல barriers தொடர்கின்றன:

•unequal access to finance
•limited property ownership
•social stereotypes
•networking gaps
•digital divide

இவைகள் பல talented women-ஐ slow down செய்கின்றன.

இதனால் future development policies-இல் women entrepreneurship central place பெற வேண்டும்.

அதற்காக:

•women-focused incubation programs
•rural digital training
•safe market access
•childcare support systems
•mentorship networks

மிகவும் அவசியமானவை.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி sustainable ஆக இருக்க வேண்டுமெனில், அதன் பெண்களின் திறன்களும் முழுமையாக பயன்பட வேண்டும்.

இன்று உலகம் knowledge economy-க்குள் நகர்கிறது.
இந்த புதிய உலகில்:

•creativity
•communication
•adaptability
•emotional intelligence

போன்ற திறன்கள் மிக முக்கியமானவை.

இந்தப் பகுதிகளில் பல women entrepreneurs extraordinary strengths கொண்டிருக்கிறார்கள்.

இதனால் எதிர்கால economy-யில் women-led businesses மிகவும் powerful force ஆக மாறக்கூடும்.

ஆனால் இன்னொரு ஆழமான உண்மையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

பெண்கள் entrepreneurship பற்றி பேசும்போது:

“அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்” என்ற mindset மட்டும் போதாது.


அவர்களை:
•innovators
•leaders
•employers
•economic architects

ஆக பார்க்கும் பார்வை உருவாக வேண்டும்.

ஏனெனில் பல women entrepreneurs இன்று:

•jobs உருவாக்குகிறார்கள்
•local supply chains sustain செய்கிறார்கள்
•digital markets உருவாக்குகிறார்கள்
•cultural industries பாதுகாக்கிறார்கள்

இது தேசிய பொருளாதார பங்களிப்பு.

இன்று ஒரு பெண்:

•தனது வீட்டிலிருந்து business நடத்தலாம்
•international customers reach செய்யலாம்
•digital brand உருவாக்கலாம்
•AI tools பயன்படுத்தலாம்
•global marketplace-இல் compete செய்யலாம்

இதுவே புதிய பொருளாதார காலம்.

ஆனால் future women entrepreneurship-இன் மிகப்பெரிய சக்தி technology மட்டும் அல்ல.
அது resilience.

பல பெண்கள்:

•சமூக அழுத்தங்களையும்
•பொருளாதார சிரமங்களையும்
•குடும்ப பொறுப்புகளையும்

மீறி தொடர்ந்து உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

அதுவே silent revolution.

ஒரு woman entrepreneur வெற்றி பெறும் போது,
அவர் தனியாக முன்னேறுவதில்லை.
அவருடன்:

°ஒரு குடும்பம்
•ஒரு சமூக நம்பிக்கை
•ஒரு புதிய தலைமுறை கனவு

முன்னேறுகிறது.

இன்று இலங்கையின் பல வீடுகளில் அமைதியாக உருவாகிக்கொண்டிருப்பது வெறும் small businesses அல்ல.
அவை நாளைய inclusive economy-யின் விதைகள்.

சில நேரங்களில் ஒரு பெண்ணின் சிறிய தொழில் முயற்சியில்தான்,
ஒரு நாட்டின் மிகப்பெரிய சமூக மாற்றம் அமைதியாக ஆரம்பிக்கிறது.

— முடிவு —

Sunday, 16 August 2026

மலைகளின் நினைவின் முதுசம் — சாகித்திய ரத்னா, வாழ்நாள் சாதனையாளர் மு. சிவலிங்கம் ஐயாவுக்கு வாழ்த்துப் பூத்தூவல்கள்…

மூத்த எழுத்தாளர்; மலையக மக்களின் அரசியல், சமூக, கலை, இலக்கிய வரலாற்றின் முக்கியமான ஆளுமை; இலங்கைத்தீவின் புலமைச் சொத்து; சாகித்திய ரத்னா மு. சிவலிங்கம் ஐயா அவர்களுடனான எனது நினைவுகள் எப்போதும் தனித்துவமானவை.
ஒரு எழுத்தாளரைப் பற்றி எழுதுவது என்பது அவரது நூல்களின் பட்டியலை அடுக்குவது மட்டுமல்ல. அவர் வாழ்ந்த காலத்தையும், அவர் எதிர்கொண்ட சமூகத்தையும், அவர் எழுப்பிய கேள்விகளையும், அவர் பதிவு செய்த கண்ணீரையும், அவர் விதைத்த நம்பிக்கைகளையும், அவர் விட்டுச் சென்ற சிந்தனைகளையும் மீண்டும் நினைவுகூர்வதாகும்.

அந்த வகையில் மு. சிவலிங்கம் ஐயா அவர்கள் ஒரு தனிமனிதர் அல்லர்.

அவர் மலையகத் தமிழர் சமூகத்தின் ஒரு நீண்ட வரலாற்றின் உயிருள்ள ஆவணம்.

மலையகப் பெருந்தோட்டச் சமூகத்தின் மண்ணிலிருந்து எழுந்த அவர், பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும், சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளராகவும், கலைஞராகவும், ஆய்வாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் தனது வாழ்வை பல தளங்களில் விரித்தவர்.

அவரது பயணம் ஒரு தனிப்பட்ட எழுத்தாளரின் பயணம் அல்ல.

அது மலையக மக்களின் குரல் எவ்வாறு எழுத்தாகியது; அந்த எழுத்து எவ்வாறு அரசியல் கேள்வியாகியது; அந்த அரசியல் எவ்வாறு சமூக உரிமைக்கான போராட்டமாகியது என்பதன் நீண்ட வரலாறும்கூட.

மலைகளின் மண்ணிலிருந்து எழுந்த குரல்

மலையகத்தின் தேயிலைத் தோட்டங்கள் அவருக்கு வெறும் பசுமையான நிலப்பரப்புகளாக இருக்கவில்லை.

அந்த மலைகளின் ஒவ்வொரு தேயிலை இலையிலும் ஒரு தொழிலாளியின் வியர்வையை அவர் கண்டார்.

ஒவ்வொரு தொழிலாளர் குடியிருப்பிலும் ஒரு குடும்பத்தின் வரலாற்றைக் கண்டார்.

ஒவ்வொரு தலைமுறையின் வாழ்க்கையிலும் பிரஜாவுரிமை, அடையாளம், கல்வி, வாழ்வுரிமை, சமூக நீதி, அரசியல் பிரதிநிதித்துவம் போன்ற எண்ணற்ற கேள்விகளை வாசித்தார்.

அதனால்தான் அவரது எழுத்தில் மலையகம் ஒரு புவியியல் அல்ல; ஒரு மனிதப் பிரபஞ்சம்.

அங்கு உழைப்பின் வாசனையும் இருக்கிறது.

வறுமையின் வலியும் இருக்கிறது.

அடையாளத்திற்கான போராட்டமும் இருக்கிறது.

தலைமுறைகளைத் தாண்டி வரும் கனவுகளும் இருக்கின்றன.

அரசியல் புறக்கணிப்பின் காயங்களும் இருக்கின்றன.

அவற்றையெல்லாம் கடந்து வாழ வேண்டும் என்ற மனிதனின் அசைக்க முடியாத நம்பிக்கையும் இருக்கிறது.

கலைக்கும் இலக்கியத்திற்கும் இடையில் ஒரு பாலம்

மு. சிவலிங்கம் ஐயாவின் ஆளுமையை ஒரு துறைக்குள் அடைத்துவிட முடியாது.

நாடகம், திரைப்படம், கவிதை, சிறுகதை, நாவல், அரசியல் கட்டுரை, சமூக எழுத்து, நகைச்சுவை எழுத்து, மொழிபெயர்ப்பு, நாட்டுப்புறவியல், ஆவணப்படுத்தல் என அவரது படைப்புலகம் பல்வேறு தளங்களில் விரிந்துள்ளது.

அவரது இலக்கியத்தில் கலை என்பது அலங்காரம் அல்ல.

கலை என்பது மக்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் ஒரு கருவி.

இலக்கியம் என்பது வெறும் ரசனையின் வெளி அல்ல.

இலக்கியம் என்பது வரலாற்றைச் சாட்சியப்படுத்தும் ஒரு பொறுப்பு.

அதனால்தான் அவரது படைப்புகளை வாசிக்கும் போது ஒரு கதையை மட்டும் வாசிப்பதில்லை.

ஒரு சமூகத்தின் வரலாற்றை வாசிக்கிறோம்.

மலையகத்தின் குரலைப் பதிவுசெய்த எழுத்து

‘மலைகளின் மக்கள்’, ‘ஒரு விதை நெல்’, ‘ஒப்பாரி கோச்சி’, ‘வெந்து தணிந்தது காலம்’ போன்ற படைப்புகள் மலையக வாழ்வியலின் பல்வேறு முகங்களை இலக்கியப் பதிவுகளாக முன்னிறுத்துகின்றன.

‘பஞ்சம் பிழைக்க வந்த சீமை’ என்ற நாவலும், ‘உயிர்’ என்ற குறுநாவலும் அவரது படைப்புலகின் வேறுபட்ட பரிமாணங்களை வெளிப்படுத்துகின்றன.

அதேபோல் ‘மலையகத் தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள்’ போன்ற ஆய்வு முயற்சிகள், ஒரு சமூகத்தின் வாய்மொழி மரபையும், பண்பாட்டு நினைவுகளையும், நாட்டுப்புறக் கலைச் செல்வங்களையும் எதிர்காலத் தலைமுறைகளுக்காகப் பதிவு செய்யும் பணியாக அமைந்துள்ளன.

‘தேயிலை தேசம்’ வழியாக கவிமணி சி.வி. வேலுப்பிள்ளையின் Born to Labour படைப்பை தமிழுக்குக் கொண்டு வந்திருப்பது, அவரது மொழிபெயர்ப்பு மற்றும் ஆவணப்படுத்தல் பணியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

இவை அனைத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது, மு. சிவலிங்கம் ஐயாவின் எழுத்து என்பது தனிப்பட்ட படைப்பாற்றலின் வெளிப்பாடு மட்டுமல்ல;

ஒரு சமூகத்தின் மறைக்கப்பட்ட வரலாற்றை எழுத்தில் பாதுகாக்கும் பண்பாட்டு முயற்சி.

எழுத்திலிருந்து சமூக அரசியல்வரை…

மு. சிவலிங்கம் ஐயாவின் அரசியல் என்பது வெறும் பதவி அல்லது அதிகாரத்திற்கான அரசியல் அல்ல.

அது மக்களின் வாழ்க்கையிலிருந்து பிறந்த அரசியல்.

மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமை, தேசிய அடையாளம், கல்வி, சமூக நீதி, தொழிலாளர் உரிமைகள், அரசியல் பிரதிநிதித்துவம், வாழ்வுரிமை போன்ற கேள்விகளோடு பின்னிப் பிணைந்த அரசியல்.

அவர் எழுத்தாளராக மட்டும் நின்றுவிடவில்லை.

மக்களின் பிரச்சினைகளைப் பற்றி எழுதினார்.

அவற்றை அரசியல் அரங்கிற்குக் கொண்டு சென்றார்.

சமூகக் குரல்களை ஒருங்கிணைக்க முயன்றார்.

அதனால் அவரது எழுத்தில் ஒரு இலக்கியவாதியின் உணர்வும், ஒரு சமூகச் செயற்பாட்டாளரின் கவலையும், ஒரு அரசியல் சிந்தனையாளரின் பார்வையும் ஒரே நேரத்தில் இயங்குகின்றன.

அவரை ‘மலையக எழுத்தாளர்’ என்று மட்டும் வரையறுப்பது அவரது ஆளுமையின் பரப்பைக் குறைத்துவிடும்.

அவர்—

ஒரு எழுத்தாளர்.
ஒரு பத்திரிகையாளர்.
ஒரு கலைஞர்.
ஒரு சமூகச் சிந்தனையாளர்.
ஒரு அரசியல் செயற்பாட்டாளர்.
ஒரு ஆய்வாளர்.
ஒரு மொழிபெயர்ப்பாளர்.
ஒரு ஆவணப்படுத்தலாளர்.
மக்களின் உரிமைக்குரலை எழுத்தில் பதிவு செய்த போராளி.

ஆய்வும் ஆவணப்படுத்தலும்

ஒரு சமூகத்தின் வரலாறு அரசியல் ஆவணங்களில் மட்டும் இருப்பதில்லை.

அது அதன் பாடல்களில் இருக்கிறது.

அதன் நாட்டுப்புறக் கதைகளில் இருக்கிறது.

அதன் துயரங்களில் இருக்கிறது.

அதன் கொண்டாட்டங்களில் இருக்கிறது.

அதன் தொழிலாளர் குடியிருப்புகளில் இருக்கிறது.

அதன் தலைமுறை நினைவுகளில் இருக்கிறது.

மு. சிவலிங்கம் ஐயா இந்த நுண்ணிய உண்மையை உணர்ந்திருந்தார்.

அதனால்தான் அவரது ஆய்வுப் பார்வை இலக்கியத்தைக் கடந்து மலையக மக்களின் பண்பாட்டு நினைவுகளையும், வாய்மொழி மரபுகளையும், சமூக வரலாற்றையும் ஆவணப்படுத்தும் பணியாக விரிந்தது.

இது எதிர்கால தலைமுறைகளுக்கான ஒரு பெரிய அறிவுச் சொத்து.

விருதுகள் — ஒரு நீண்ட பயணத்தின் அங்கீகாரங்கள்

அவரது நீண்டகால இலக்கிய மற்றும் சமூகப் பணிகளுக்கு கிடைத்த பல்வேறு விருதுகளும் கௌரவங்களும் அவரது பங்களிப்பின் நிறுவன ரீதியான அங்கீகாரங்களாகும்.

ஆனால், எந்த விருதையும் விட உயர்ந்த விருது ஒன்று இருக்கிறது.

மக்களின் நினைவில் நிலைத்திருப்பது.

அந்த விருதை எந்த நிறுவனமும் வழங்க முடியாது.

அதை காலம்தான் வழங்குகிறது.

அதை மக்கள் மட்டுமே வழங்குகிறார்கள்.

அந்த வகையில் மு. சிவலிங்கம் ஐயா அவர்கள் ஏற்கனவே காலத்தின் மிகப்பெரிய விருதைப் பெற்றுவிட்டவர்.

எனது நினைவுகளில் மு. சிவலிங்கம் ஐயா

எனக்கு மு. சிவலிங்கம் ஐயா ஒரு தொலைதூர இலக்கிய ஆளுமை மட்டுமல்ல.

அவர் எனது ஆசான்; எங்களுடைய மண்ணின் பெருமைமிகு எழுத்தாளர் எஸ். முத்துமீரான் அவர்களின் நெருங்கிய நண்பர்.

கிழக்கு மண்டலத்தின் கலை, இலக்கிய மரபுகள் மற்றும் அதன் தனித்துவமான படைப்பியல் வடிவங்கள் குறித்து மிகுந்த ஈடுபாட்டுடன் பேசக்கூடியவர்.

கிழக்கும் மலையகமும் வெவ்வேறு புவியியல் வெளிகள்.

ஆனால் மனிதர்களின் வலியும், உழைப்பும், பண்பாடும், அடையாளத் தேடலும், இலக்கியக் கனவுகளும் அந்த எல்லைகளைத் தாண்டிச் செல்கின்றன என்பதை அவர் நன்றாக உணர்ந்திருந்தார்.

கடந்த காலங்களில் அவரிடமிருந்து நான் நிறையக் கற்றிருக்கிறேன்.

அவரோடு பயணித்திருக்கிறேன்.

மட்டக்களப்பு சத்துருகொண்டான் இலக்கியச் சந்திப்பு, கொட்டகலை இலக்கியச் சந்திப்பு போன்ற நிகழ்வுகளில் அவரோடு பங்கேற்றிருக்கிறேன்.

தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே, நடுகல்லுக்கு ( சுமைதாங்கி) அருகில் இடம்பெற்ற அவரது ‘பஞ்சம் பிழைக்க வந்த சீமை’ வெளியீட்டு நிகழ்விலும் கலந்துகொண்டிருக்கிறேன்.

அந்த நிகழ்வு எனது நினைவில் ஒரு நூல் வெளியீடாக மட்டும் இல்லை.

மலையக மண்ணின் நடுவே மலையகத்தின் வரலாறே தன்னைத் தானே வாசித்துக்கொண்ட ஒரு தருணமாக அது பதிந்திருக்கிறது.

அவரோடு நீண்ட உரையாடல்களில் ஈடுபட்டிருக்கிறேன்.

அவரது அனுபவங்களைச் செவிமடுத்திருக்கிறேன்.

அவரது பார்வைகளோடு உடன்பட்டும், சில இடங்களில் சிந்தித்தும், பல இடங்களில் கற்றும் இருக்கிறேன்.

ஒரு வீடு… ஒரு பல்கலைக்கழகம்…

குறிப்பாக 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில், பேராசிரியர் சே. யோகராசா அவர்களுடனும் நண்பர் அக்கறைப்பற்று நாளீருடனும் அவரது இல்லத்தில் தங்கியிருந்த நினைவு இன்றும் மனதில் பசுமையாக இருக்கிறது.

அப்போது ஐயா அவர்களும் அவர்களது துணைவியாரும் எங்களை விருந்தினர்களாக நடத்தவில்லை.

தங்களுடைய வீட்டுப் பிள்ளைகளைப் போலவே உபசரித்தனர்.

அந்த அன்பில் எந்தப் பாசாங்கும் இருக்கவில்லை.

ஒரு மூத்த எழுத்தாளரின் பெருமிதம் இருக்கவில்லை.

ஒரு அறிவுஜீவியின் தூரமும் இருக்கவில்லை.

அங்கு இருந்தது—

அன்பு.
மனிதநேயம்.
பகிர்வு.
உரையாடல்.

இலக்கியத்தில் உயர்ந்திருந்த ஒருவர், மனித உறவுகளில் இன்னும் உயரமாக இருக்க முடியும் என்பதை அந்த நாட்கள் எனக்குக் கற்றுத் தந்தன.

அவரது வீடு எனக்கு ஒரு வீடாக மட்டும் இருக்கவில்லை.

அது ஒரு சிறிய பல்கலைக்கழகம்.

அங்கே பாடத்திட்டம் இல்லை.

ஆனால் பாடங்கள் இருந்தன.

இலக்கியம் பற்றிப் பேசினோம்.

அரசியல் பற்றிப் பேசினோம்.

மலையக மக்களின் வாழ்வு பற்றிப் பேசினோம்.

கிழக்கின் கலை மரபுகள் பற்றிப் பேசினோம்.

எழுத்தாளர்கள் பற்றிப் பேசினோம்.

வரலாறு பற்றிப் பேசினோம்.

படைப்பின் பொறுப்பு பற்றிப் பேசினோம்.

மனிதர்களைப் பற்றிப் பேசும்போது, அவரது குரலில் ஒரு எழுத்தாளனின் கூர்மையும், ஒரு சமூகச் செயற்பாட்டாளனின் கவலையும், ஒரு மூத்தவரின் அன்பும் ஒன்றாகக் கலந்திருக்கும்.

அந்த உரையாடல்கள் இன்றும் என்னுள் ஒலிக்கின்றன.

அந்த நினைவுகள் வெறும் கடந்தகாலச் சம்பவங்கள் அல்ல.

எனது இலக்கியப் பயணத்தின் ஒரு அமைதியான பாடசாலை.

சிவாமுதம்’ — நினைவைக் கௌரவமாக்கும் தருணம்

அத்தகைய ஒரு பெரும் ஆளுமைக்கு ‘சிவாமுதம்’ எனும் சிறப்பு இதழை வெளியிட்டு, அவரது கலை, இலக்கிய, சமூக, அரசியல் மற்றும் அறிவுசார் பங்களிப்புகளை நினைவுகூர்ந்து வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்படுவது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.

மலையக மக்களின் குரலை எழுத்தின் வழியாக பல தசாப்தங்களாகப் பதிவு செய்த ஒருவரை கௌரவிப்பது என்பது ஒரு தனிமனிதரைப் போற்றுவது மட்டும் அல்ல.

ஒரு சமூகத்தின் நினைவைக் கௌரவிப்பது.

ஒரு தலைமுறையின் போராட்டங்களை நினைவுகூர்வது.

ஒரு பண்பாட்டு மரபை அடுத்த தலைமுறைக்கு ஒப்படைப்பது.

ஒரு எழுத்தாளருக்கு மட்டுமல்ல, அவர் எழுதிய மக்களுக்கும் மரியாதை செலுத்துவது.

அதனால்தான் இந்த நிகழ்வு ஒரு சாதாரண பாராட்டு நிகழ்வாக எனக்குத் தெரியவில்லை.

இது ஒரு இலக்கியக் கடன் செலுத்தும் தருணம்.

மலைகளின் மடியில் பிறந்த ஒரு குரல், இலங்கையின் இலக்கியப் பரப்பைக் கடந்து பல தலைமுறைகளின் நினைவுக்குள் சென்று விட்டது.

அந்தக் குரலை நாம் கேட்க வேண்டும்.

அந்த எழுத்தை நாம் வாசிக்க வேண்டும்.

அந்த வரலாற்றை நாம் ஆவணப்படுத்த வேண்டும்.

அந்த சிந்தனைகளை நாம் விவாதிக்க வேண்டும்.

அந்த மனிதநேயத்தை நாம் தொடர வேண்டும்.

ஏனெனில்—

சில எழுத்தாளர்கள் நூல்களில் வாழ்கிறார்கள்.

சிலர் விருதுகளில் வாழ்கிறார்கள்.

சிலர் வரலாற்றில் வாழ்கிறார்கள்.

ஆனால்,

மு. சிவலிங்கம் ஐயா போன்றவர்கள்
மக்களின் நினைவிலும்,
மண்ணின் மணத்திலும்,
தேயிலை இலையின் பசுமையிலும்,
தொழிலாளியின் வியர்வையிலும்,
இலக்கியத்தின் வரிகளிலும்,
எதிர்கால தலைமுறைகளின் கேள்விகளிலும்
தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருப்பார்கள்.
மலைகளின் வரலாற்றை எழுதியவருக்கு,
மலைகளின் மக்கள் சார்பில்
எமது அன்பையும் மரியாதையையும்
வாழ்த்துகளாகப் பூத்தூவுவோம்.

சாகித்திய ரத்னா
வாழ்நாள் சாதனையாளர்
மு. சிவலிங்கம் ஐயா அவர்களுக்கு கிழக்கில் இருந்து
இதயம் நிறைந்த வாழ்த்துகள்!

அவரை கௌரவிக்கும் ‘சிவாமுதம்’ சிறப்பு இதழ் வெளியீடும், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வும் சிறப்புற நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மலைகளின் நினைவின் முதுசத்திற்கு
மனமார்ந்த வாழ்த்துப் பூத்தூவல்கள்…!

— இலக்கியன் முர்ஷித்

#முசிவலிங்கம்
#சிவாமுதம்
#மலையகஇலக்கியம்
#மலையகத்தமிழர்
#சாகித்தியரத்னா
#வாழ்நாள்சாதனையாளர்
#தமிழ்இலக்கியம்
#இலங்கைத்தமிழ்இலக்கியம்
#மலையகவரலாறு
#இலக்கியன்_முர்ஷித்

Tuesday, 11 August 2026

6. பெண்கள் தொழில் முனைவோரின் அமைதியான புரட்சி”Part 6.4 — Digital Women Entrepreneurs

#முர்ஷித்

ஒரு காலத்தில் பெண்கள் தொழில் ஆரம்பிக்க வேண்டுமெனில்:

•shop தேவைப்பட்டது
•பெரிய முதலீடு தேவைப்பட்டது
•வெளியுலக தொடர்புகள் தேவைப்பட்டன
இன்று ஒரு smartphone மற்றும் internet connection கூட,
ஒரு பெண்ணின் பொருளாதார உலகத்தை மாற்றக்கூடிய கருவிகளாக மாறியுள்ளன.

Industrial Development Board of Ceylon இன் கள அனுபவங்களில் நான் மிகத் தெளிவாகக் கண்ட மாற்றங்களில் ஒன்று

பல women entrepreneurs, digital platforms மூலம் தங்களுக்கான புதிய சந்தைகளை உருவாக்கத் தொடங்கியுள்ளனர்.

ஒரு mother entrepreneur:

•homemade cakes online-இல் விற்கிறார்
•Facebook live மூலம் products showcase செய்கிறார்
•WhatsApp orders manage செய்கிறார்

ஒரு rural artisan:

•தனது handicrafts-ஐ TikTok videos மூலம் அறிமுகப்படுத்துகிறார்
•nationwide delivery செய்கிறார்

இது வெறும் technology adoption அல்ல.
இது economic visibility.

Facebook, TikTok, மற்றும் WhatsApp Business போன்ற platforms இன்று:

•பெண்களின் குரலாகவும்
•அவர்களின் சந்தையாகவும்
•அவர்களின் marketing office-ஆகவும்

மாறிவிட்டன.

முன்பு பல women entrepreneurs:

“நமக்கு exposure கிடைக்காது” என்று நினைத்தார்கள்.

ஆனால் இன்று:

ஒரு village-based home business கூட viral ஆக முடிகிறது

ஒரு homemade product கூட national customer base உருவாக்க முடிகிறது

இதுவே digital democratization.

ஒரு முக்கியமான மாற்றம் என்னவெனில், online business பெண்களுக்கு flexibility-யையும் வழங்குகிறது.

அவர்கள்:

•family responsibilities manage செய்யும் போது கூட
•business operations நடத்த முடிகிறது
•customers respond செய்ய முடிகிறது
•digital marketing செய்ய முடிகிறது

இதனால் traditional mobility limitations சில அளவில் குறைகின்றன.

ஆனால் digital entrepreneurship-க்கும் challenges இருக்கின்றன.

பல women entrepreneurs:

•online scams பற்றி பயப்படுகிறார்கள்
•technology confidence குறைவாக இருக்கிறது
•professional branding தெரியவில்லை
•pricing strategy-இல் சிக்குகிறார்கள்

இதனால் digital literacy training மிகவும் அவசியமாகிறது.

இன்று future-ready women entrepreneurs தெரிந்திருக்க வேண்டியவை:

•social media branding
•online customer communication
•digital payment systems
•product photography
•content creation
•cyber safety awareness

ஏனெனில் future market increasingly online ஆக மாறிக்கொண்டிருக்கிறது.

இன்னொரு முக்கியமான விஷயம் — storytelling.

பல women-led businesses-க்கு powerful human stories இருக்கின்றன.

ஒரு widow woman rebuilding her life.
ஒரு mother supporting her children’s education.
ஒரு rural creator preserving traditional craft.

இந்த stories customers-உடன் emotional connection உருவாக்குகின்றன.

இன்று digital marketing-இல் authenticity itself ஒரு brand value ஆக மாறியுள்ளது.

ஒரு முக்கியமான psychological transformation கூட நடக்கிறது.

முன்பு பல women entrepreneurs:

“நான் business woman இல்லை” என்று நினைத்திருக்கலாம்.

ஆனால் இன்று:

•online customers
•repeat orders
•positive reviews
•digital visibility

இவைகள் அவர்களின் self-confidence-ஐ மாற்றுகின்றன.

இதுவே economic identity transformation.

ஒரு woman entrepreneur online-இல் தனது முதல் order பெறும் அந்த தருணம் —
அது வெறும் sale அல்ல.

அது: “என் உழைப்புக்கு உலகத்தில் இடம் இருக்கிறது” என்ற உணர்வு.

இன்று இலங்கையின் பல வீடுகளில் அமைதியாக உருவாகிக்கொண்டிருப்பது வெறும் digital businesses அல்ல.
அவை பெண்களின் புதிய தலைமுறை பொருளாதார இயக்கங்கள்.

சில நேரங்களில் ஒரு mobile notification-இல்தான்,
ஒரு பெண்ணின் புதிய சுயநம்பிக்கை ஆரம்பிக்கிறது.

(தொடரும்…)

Friday, 7 August 2026

என் வீட்டில் இரண்டு நிலவுகள்

#முர்ஷித் 

என் வீட்டின்
மூடிய கதவுகளுக்குள்
ஒரு பெண்
என் சோர்வுகளை
மௌனத்தால் வருடுகிறாள்
அவள் என் அமைதி.

ஒரு சிறுமி
என் விரல்களைப் பிடித்து
நாளைய உலகத்திற்குள்
என்னை அழைத்துச் செல்கிறாள்
அவள் என் விடியல்.

ஒருத்தி
என் இரவுகளுக்குள்
நிலவாய் வருகிறாள்,
ஒருத்தி
என் இருளுக்குள்
விதையாய் விழுகிறாள்
இருவரும் என் உயிரின் ஒளியாய் மலர்கிறார்கள்.

நான்
வெளியில்
உலகத்தோடு போராடிக்கொண்டிருக்கிறேன்;
வீட்டுக்குள் வந்ததும்
என் கவசங்களை
கதவோரத்தில் கழற்றிவிட்டு
ஒரு மனிதனாகிறேன்
அவர்களின் அன்பில் கரைகிறேன்.

அவள்
என் சொல்லப்படாத
வாக்கியங்களின்
முற்றுப்புள்ளி;
அவள்
என் எழுதப்படாத
கவிதைகளின்
முதல் வரி.

மகள்
என் நாளையைக் கேட்கவில்லை—
என் விரல்களை மட்டும் கேட்கிறாள்;
அந்தச் சிறிய விரல்களில்
என் முழு எதிர்காலமும்
துடிக்கிறது.

சில இரவுகளில்
இல்லறம்
ஒரு வீடல்ல
இரண்டு இதயங்கள்
ஒரே மௌனத்தை
பகிர்ந்து கொள்ளும்
ஒரு பள்ளிவாசல் போலத் தோன்றுகிறது.

அங்கே
அவள் ஒரு பிரார்த்தனை,
மகள் ஒரு பதில்,
நான்
இன்னும் புரியாத
ஒரு துஆ.

வாழ்க்கை
எனக்குக் கொடுத்த
பெரிய செல்வம்
வங்கியில் இல்லை;
என் பெயரை
அழைக்கும்
இரண்டு குரல்களில்
அது தினமும்
பிறக்கிறது.

மனைவி
என் விழுந்த இடங்களில்
கைநீட்டும் கரம்;
மகள்
என் தொலைந்த நாள்களை
திருப்பிக் கொடுக்கும் வரம்.

அவள் இருந்தால்
வீடு
வெறும் வீடல்ல
வாழ்வு.

மகள் சிரித்தால்
நேரம்
வெறும் நேரமல்ல
பெருநாள்.

அவர்களிருவரும்
என் அருகில் இருக்கும் வரை
நான்
தனிமையைப் பற்றி
எப்படி எழுதுவேன்?

ஏனெனில்

என் இரவுக்கு
அவள் நிலா,
என் பகலுக்கு
மகள் உலா;
என் பாதைக்கு
அவள் துணை,
என் நாளைக்கு
மகள் துணை.

இறைவன்
எனக்காக
வானத்தில்
இரண்டு நட்சத்திரங்களை
வைத்திருக்கவில்லை

என் வீட்டிற்குள்
இரண்டு உயிர்களை
ஒளியாக
வைத்திருக்கிறான்.

அதனால்
என் வாழ்க்கை
ஒரு நீண்ட கவிதை என்றால்,

அதன்
முதல் எழுத்து— அவள்.
அதன்
கடைசி எழுத்து— மகள்.

நடுவில்
நான் இல்லை.

அவர்களுக்கிடையே
துடித்துக்கொண்டிருக்கும்
ஒரு சிறிய
இல்லற இதயம் மட்டுமே.

Thursday, 6 August 2026

6. பெண் தொழில் முனைவோரின் அமைதியான புரட்சி”Part 6.3 — சிறு சேமிப்பிலிருந்து பொருளாதார சுதந்திரம் வரை


-முர்ஷித்

பல பெண்கள் entrepreneurship-ஐ பெரிய கனவுகளோடு ஆரம்பிப்பதில்லை.
அவர்கள் ஆரம்பிப்பது —
ஒரு சிறிய தேவையிலிருந்து.

ஒரு குழந்தையின் school fees.
ஒரு குடும்பத்தின் monthly expenses.
ஒரு அவசர மருத்துவச் செலவு.
அல்லது “யாரிடமும் கையேந்தாமல் வாழ வேண்டும்” என்ற அமைதியான தீர்மானம்.
Industrial Development Board of Ceylon இன் கள அனுபவங்களில் நான் மிக ஆழமாக உணர்ந்த ஒன்று —
பல women entrepreneurs-ன் முதல் capital money அல்ல.
அது self-respect.

ஒரு பெண்:

•homemade food sales ஆரம்பிக்கிறார்
•tailoring orders எடுக்கிறார்
•beauty products தயாரிக்கிறார்
•small online reselling செய்கிறார்

ஆரம்பத்தில் income மிகவும் குறைவாக இருக்கலாம்.

ஆனால் அந்த முதல் வருமானம் அவர்களுக்கு வெறும் பணம் அல்ல.
அது:

•confidence
•identity
•independence
•decision-making power

இவைகளின் ஆரம்பம்.

ஒரு முக்கியமான உண்மை என்னவெனில், பெண்களின் பொருளாதார சுதந்திரம் குடும்பங்களின் சமூக அமைப்பையே மாற்றக்கூடிய சக்தி.

ஒரு woman entrepreneur:

•தனது income-ஐ education-க்கு பயன்படுத்தலாம்
•family nutrition மேம்படுத்தலாம்
•savings culture உருவாக்கலாம்
•next generation mindset மாற்றலாம்

இதனால் women-led microbusinesses பல நேரங்களில் சமூக முதலீடுகளாக மாறுகின்றன.

ஆனால் இந்தப் பயணம் எளிதானதல்ல.

பல women entrepreneurs:

•limited capital-இல் ஆரம்பிக்கிறார்கள்
•informal borrowing-ஐ நம்புகிறார்கள்

profit-ஐ முழுவதும் family expenses-க்கு செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்

இதனால் business scaling மிகவும் slow ஆகிறது.

இங்கே financial literacy மிகவும் முக்கியமானது.

ஒரு woman entrepreneur தெரிந்திருக்க வேண்டியது:

•savings discipline
•reinvestment strategy
•expense separation
•pricing awareness
•emergency fund culture

ஏனெனில் income உருவாக்குவது மட்டும் empowerment அல்ல.
அதை sustain செய்வதுதான் long-term empowerment.

பல நேரங்களில் நான் களத்தில் பார்த்திருக்கிறேன் —
ஒரு பெண் entrepreneur:

•தனது முதல் sewing machine வாங்குகிறார்
•பின்னர் ஒரு assistant hire செய்கிறார்
•பின்னர் small production unit உருவாக்குகிறார்

அந்த journey வெறும் business growth அல்ல.
அது identity transformation.

ஒரு காலத்தில்: “வீட்டில் இருப்பவர்” என்று பார்க்கப்பட்ட ஒருவர்,
பின்னர்:

•employer ஆக
•trainer ஆக
•community leader ஆக
மாறுகிறார்.

இதுவே women entrepreneurship-இன் silent power.

இன்று digital economy இந்த மாற்றத்தை இன்னும் வேகப்படுத்துகிறது.

Facebook மற்றும் WhatsApp Business போன்ற platforms காரணமாக:

•women entrepreneurs direct customers reach செய்கிறார்கள்
•home-based brands உருவாக்குகிறார்கள்
•online communities build செய்கிறார்கள்

இதனால் traditional business barriers சில அளவில் உடைகின்றன.

ஆனால் இன்னொரு முக்கியமான விஷயம் — ownership mindset.

பல women entrepreneurs இன்னும்:

“இது small side income தான்” என்று தங்களின் business-ஐ underestimate செய்கிறார்கள்.

ஆனால் small consistent income கூட:

•economic stability
•family resilience
•social confidence

உருவாக்கக்கூடிய சக்தி.

ஒரு பெண் தனது முதல் தனிப்பட்ட வருமானத்தை சம்பாதிக்கும் அந்த தருணம் —
அது வெறும் financial transaction அல்ல.

அது: “நானும் உருவாக்க முடியும்” என்ற உள்ளார்ந்த அறிவிப்பு.

இன்று இலங்கையின் பல வீடுகளில் அமைதியாக உருவாகிக்கொண்டிருப்பது வெறும் small businesses அல்ல.
அவை பெண்களின் புதிய பொருளாதார குரல்கள்.

சில நேரங்களில் ஒரு சிறிய சேமிப்பு பெட்டியில்தான்,
ஒரு பெண்ணின் முழு வாழ்க்கை மாற்றத்தின் முதல் விதை மறைந்திருக்கும்.

(தொடரும்…)

Wednesday, 5 August 2026

புலம்பெயர்தல்



துயரத்தின் மீதான 
பாடல்கள்
வழிந்தோடும்
தெருக்கள்.

புகை.
பனி.

புலரியின்
முதல் மூச்சில்

என் ஆத்மா
தன்
காலணிகளைக் கழற்றி
நடக்கத் தொடங்குகிறது.

ஒவ்வொரு விடியலும்
ஒரு பிறப்பு அல்ல—

நேற்றைய
என்னிடமிருந்து
ஒரு
புலம்பெயர்தல்.

— முர்ஷித்

Tuesday, 4 August 2026

ஜன்னலறைக்குள் ஒரு பிரபஞ்சம்

#முர்ஷித்

அறைச்சுவர்களில் வரையப்பட்ட காடு
பச்சை இரவை
உதிர்த்துக்கொண்டிருக்கிறது.

மெல்லிய குளிரின்
விரல்களால்
திறக்கப்படும் கதவு,

அறைக்குள்
ஒரு நிலவை
மலரவிடுகிறது.

தனிமையோடு
நீண்ட காலம்
சஞ்சரிக்கப் பழகிய
என் மனம்,

ஒரு கவிதையின்
மூச்சில்
தன்னை நிரப்பிக்கொள்கிறது.

அப்போது
புனைவு
புனிதத்தின்
நெற்றியில்
முத்தமிடுகிறது.

ஜன்னலின்
நாற்கர வானத்தில்
சிறைப்பட்டிருந்த
நட்சத்திரங்கள்,

ஒவ்வொன்றாக
என் ஆன்மாவின்
பூட்டுகளைத்
திறந்துவிடுகின்றன.

வாசிப்பு—
ஒரு புத்தகத்தைத்
திறப்பதல்ல;

தன்னை
மூடிக்கொண்டிருந்த
பிரபஞ்சத்தை
திறப்பது.

இயற்கையை
வாசிக்கத் தெரிந்தவனுக்கு

ஒவ்வொரு இலையும்
ஒரு வேதம்,
ஒவ்வொரு காற்றும்
ஒரு துஆ,
ஒவ்வொரு மழைத்துளியும்
இறைவனின்
கையொப்பம்.

பிறகு
பிரபஞ்சம் என்பது
வேறொன்றுமல்ல—

இயற்கை
தன்னையே
வாசித்துக்கொண்டிருக்கும்
ஒரு முடிவற்ற
கவிதை.

வாருங்கள்...
அனுபவிக்க அல்ல—
கரைந்துபோக.