Showing posts with label என்னைப்பற்றி சான்றோர். Show all posts
Showing posts with label என்னைப்பற்றி சான்றோர். Show all posts

Tuesday, 22 April 2014

எனது பார்வையில் கவிஞர் இலக்கியன் மு.முர்சித்....





{நான், எழுத்தாளர் எஸ்.முத்துமீரா, கலாநிதி மர்சும் மிசா}


-எஸ்.முத்துமீரான்-


ஒரு மனிதனுடைய எண்ணங்களின் வெளிப்பாடுகளையும்,அவனினுடைய கற்பனையின் செயற்பாடுகளையும் உலகில் படம்பிடித்து காட்டி, எங்கள் மத்தியில் உலாவரச்செய்யும் எழுத்துக்களை நாங்கள் கவிதைகள்,கதைகள்,நாவல்கள் என்று கூறுகிறோம் இவைகள் தான் ஒவ்வொரு படைப்பாளியின் ஆற்றல்களையும் சிறப்பையும் வாழ்வியலின் ஆழத்தையும் அனுபவத்தின் ஆளுமையும் கொண்டதாகப்பிரதிபலிக்கும். இது தான் இலக்கிய படைப்புக்கள் எங்களுக்கு காட்டும் சிறப்புக்கள் ஆகும்.

இளம் கவிஞர் முர்சித்தின் கவிதைகள் எல்லாம் எங்களுக்கு இதைத்தான் கூறுகிறது. நல்ல கவிதைத்துவமும்,கற்பனை வளமும் நிறைந்துள்ள இவருடைய கவிதைகள் புதுமையை தேடி காட்டாறு போல் ஓடிக்கொண்டிருக்கின்றது. புதுக்கவிதை வடிவில் தனக்கென ஒரு தனிவடிவையும்,நடையையும் உருவாக்கி தன் படைப்புக்களைத்தந்து கொண்டிருக்கும் இக்கவிஞனின் எதிர்காலம் இலக்கிய உலகில் பிரகாசிக்கும் என்பதை இவருடைய படைப்புக்கள் கட்டியம் கூறுகின்றன. எதிலும் புதுமையைத்தேடும் இக்கவிஞன் தன் உத்தியிலும், ஆற்றலிலும், ஆளுமையைக்காட்டி, கவிதைப்போக்கிலும் நடையிலும் புரட்சி செய்துள்ளார். இது இவருடைய திறமைக்கும், ஆளுமைக்கும் மேலும் மெருகூட்டி நிற்கிறது.

எடுத்த எடுப்பிலேயே, தான் தட்டுத்தடுமாறிப்படைக்கிற கவிதைகளை, கதைகளை உடன் நூல்களாக வெளியிடத்துடிக்கும் படைப்பாளிகள் போலில்லாமல், இன்னும் நல்லபடி தன்னுடைய கவிதைகளை நன்றாக புடம் போட்ட பின்னர் நூல்களாக வெளியிட்டால் இலக்கிய உலகம் வரவேற்கும் என்பது எனது கணிப்பீடு. தீட்டத்தீட்டத்தான் கத்தி கூராகும். கூரான கத்தியால்தான் வாழ்வில் பிரயோசனமும் பயனும் உண்டு. இது தான் உண்மை. இதை விட்டுவிட்டு எதையும் தாங்கள் நினைத்த படியெல்லாம் வசனங்களாக கிறிக்கிவிட்டு அதற்கு கவிதைகள் என்ற பெயரைச்சூட்டி இலக்கிய உலகில் உலாவச்செய்வது, புற்றீசல்களின் வாழ்வைப்போன்றுதான் ஆகிவிடும். இந்நிலை இலக்கிய உலகில் மாற வேண்டும். இதுவே இலக்கிய வளர்ச்சிக்கு நல்ல படிகளாக இருக்கும்.

இதைவிட்டு தாங்களே தங்கள் நூல்களுக்கு வெளியிட்டு விழாக்களையும், அறிமுக விழாக்களையும் நடத்தி, அவைகளில் கூலிக்கு மாரடிப்பவர்களைக்கொண்டு புகழ்கள் பாடச்செய்து, பன்னாடைகள் போர்த்தி , உதவாத, உப்புச்சப்பில்லா போலி பட்டங்களைப் பெற்று அன்நிகழ்வுகளின் புகைப்படங்களை பத்திரிகைகளில் மற்றும் இணையங்களில் போட்டுத் திருப்தியடைவது, குளக்கரையில் இருந்து பீ உருட்டியபடி மேலுக்கு வரத்துடிக்கும் கறுத்த குளக்கரை வண்டின் அறியாமையை ஒத்த செயலாகவே முடியும்.
இந்நிலை இலக்கிய உலகில் எப்பொழுது அழிகின்றதோ அன்றுதான் இலக்கிய உலகில் மணம் வீசும் மலர்களும், சுவையுள்ள கனிகளும் கிடைக்கம். எங்களிலும் ஒரு தாகூர், பாரதி, பாரதிதாசன், கவிக்கோ.அப்துர்ரகுமான், புதுமைப்பித்தன், மகாகவி முருகையன் போனறவர்கள் வருவார்கள். இவர்களைப் போன்றவர்கள் வருவதற்கு முயற்சிப்போம்.

கவிஞர் தம்பி முர்சித்தின் கவிதைகள் இன்னும் புடம்போடப்படல் வேண்டும். அவ்வாராயின் வருங்காலத்தில் இவருடைய கவிதைகள் பல ஆளுமை கொண்ட படைப்புக்களாக வரும் என்பதில் ஐயமில்லை. நல்ல பணிவும், பண்பும், கவித்துவமும் உள்ள இக்கவிஞனின் வருங்காலம், வளமுள்ளதாகவும், சிறப்பாகவும் இலக்கிய உலகில் இருக்க என் வாழ்த்துக்களும், பிராத்தனைகளும்