இலக்கியன் முர்ஷித்
இலங்கையின் அரசியல் சூழலில் மிகவும் பரீட்சையமான பெயர்தான் முபாறக் அப்துல் மஜீத். மௌலவி (மௌலவி. முபாறக்) தீவிர அரசியல், சமூக செயற்பாட்டாளராக அறியப்படும் இவர் பத்திரிகைத் துறை பட்டதாரி, மட்டுமல்லாமல் இலங்கை முஸ்லிம் உலமாக் கட்சி எனும் அரசியல் கட்சியின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் அரசியல் சூழலில் மிகவும் பரீட்சையமான பெயர்தான் முபாறக் அப்துல் மஜீத். மௌலவி (மௌலவி. முபாறக்) தீவிர அரசியல், சமூக செயற்பாட்டாளராக அறியப்படும் இவர் பத்திரிகைத் துறை பட்டதாரி, மட்டுமல்லாமல் இலங்கை முஸ்லிம் உலமாக் கட்சி எனும் அரசியல் கட்சியின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமியர்களின் புனித நூலான திருக் குர்ஆனை தமிழுக்கு மொழி பெயர்த்தவர்களுள் இவர் மிகவும் முக்கியமானவர், இதனால் இலங்கையை மையமாகக் கொண்டு இயங்கிவரும் தாருல் குர்ஆன் எனும் இஸ்லாமிய கல்வி மையத்தினால் இவருக்கு கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.
இலங்கையின் கிழக்கின் அரசியல் மற்றும் வியாபார மையமாக சித்தரிக்கப்படும் கல்முனை நகரை சொந்த ஊராகக் கொண்டுள்ள போதும் தற்போது தமிழ், அரபு, சிங்களம் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பாளராக கொழும்பில் பணிபுரிந்துவருகிறார் முபாறக் அப்துல் மஜீத். இவருடன் இலங்கை முஸ்லிம் அரசியலின் சமகால நிலை தொடர்பில் வியூகா உரையாடிய போது,
கேள்வி 01: இலங்கையின் சிறுபான்மை அரசியலின் இன்றைய நிலை பற்றிய உங்கள் பார்வை என்ன?
முபாரக் மௌலவி: இலங்கையில் உள்ள சிறுபான்மை இனங்களின் அரசியல் என்பது அறிவை அடகு வைத்துவிட்டு உணர்வுகளுக்கு அடிமைப்பட்டதாகவே உள்ளது. சிறுபான்மை மக்களின் வாழ்வு, எதிர்காலம் என்பவற்றை எவ்வாறான அணுகுமுறை மூலம் வென்றெடுக்கலாம் எனப் புரியாமல் இடையனால் ஓட்டிச்செல்லப்படும் ஆடுகள் நிலையிலேயே சிறுபான்மை சமூகங்கள் உள்ளன.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை தமிழ் கூட்டமைப்பு தமக்கான விடிவிளக்காக அமையும் என நினைத்து தமது வாழ்வை இழந்து கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்களோ முஸ்லிம் காங்கிரஸ் தமக்கு விடுதலை பெற்றுத்தரும் என்ற அதீத நம்பிக்கையில் தமது வாழ்வை இழந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆக சிறுபான்மை மக்கள் இன்னமும் அரசியல் விழிப்புணர்வு பெறவில்லை என்பதே உண்மையாகும். குறிப்பாக முஸ்லிம் சமூகம் பணத்திற்கும், பகட்டுக்கும், உணர்வூட்டலுக்கும் மயங்கி தமது உண்மையான அரசியல் வெற்றியை நோக்கி நகர முடியாமல் இருக்கிறார்கள். இந்த நிலை தொடருமானால் இன்னும் பல தசாப்தங்களுக்கு சிறுபான்மை மக்களின் நிலை பரிதாபமாகவே இருக்கும். ஆகவே சிறுபான்மை மக்கள் உணர்வு பூர்வமான அரசியலில் இருந்து விலகி யதார்த்தபூர்வமான, அறிவுபூர்வமான அரசியலை நோக்கி நகர வேண்டும். இதைத்தான் உலமா கட்சி செய்து கொண்டிருக்கிறது.
கேள்வி 02: இன்றைய காலகட்டத்தில் இலங்கை அரசியலில் நேரடியாகவே மதப்போதகர்கள் ஈடுபடுகின்றனர். குறிப்பாக சில பௌத்த மதப்போதகர்கள் பலரது அரசியல் நிலை சிறுபான்மை மக்களுக்கு அச்சமூட்டும் அரசியலாக உள்ளதே இதுபற்றி?
முபாரக் மௌலவி: மதங்களைப் பொருத்தவரை கிறிஸ்த்துவத்தை எடுத்துக் கொண்டால் மத்திய காலம் என்று சொல்லப்படும் ஐரோப்பாவின் மறுமலர்ச்சியின் போதும் அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட புரட்சிகளின் விளைவாக மதம் வேறு, அரசியல் வேறு. அரசியல்வாதிகள் அரசியலைப் பார்த்துக் கொள்ளட்டும், மதத்தலைவர்கள் தங்கள் மதத்தை சீர்திருத்தங்களுக்கு உட்படுத்துவதோடு உலகம் பூராகவும் கிறிஸ்துவத்தை பரப்பும் பணியை அதாவது கிறிஸ்த்துவத்தை வளர்க்கும் பணியை பார்த்துக் கொண்டால் போதும் எனும் சிந்தனை அனைவர் மனங்களிலும் விதைக்கப்பட்டுவிட்டது. அதன் தாக்கம் இன்றும் கிறிஸ்த்துவ மதத்தலைவர்கள் இலங்கையில் மட்டுமல்லாது ஏனைய நாடுகளிலும் அரசியலில் குறிப்பாக நேரடி அரசியலில் ஈடுபடவில்லை.
பௌத்தத்தை எடுத்துக் கொண்டால் கௌத்தம சித்தார்த்தர், ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட அரசைவும் அரசியலையும் துறந்து துறவரம் புகுந்தவர். அவருடைய போதனைகள் அனைத்தும் மானுட வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டுதலாக இருக்கின்றன. ஆனால் இன்று அவருடைய போதனைகளை எடுத்து நடந்து மற்றவர்களுக்கும் போதிக்கும் பௌத்த மதகுருக்கள் சிலர் அரசியலில் ஈடுபட்டு மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படும் நிலையும் தற்போது இலங்கையில் உருவாகியுள்ளது.
ஜாதிக ஹெல உரிமையை போன்ற கட்சிகளும் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. பௌத்த கொள்கைகளுக்கும் வழிகாட்டுதல்களுக்கும் முரணான செயற்பாடுகளாக அவை இருப்பினும் மக்களுக்காக மக்களின் நன்மை கருதி ஆளுமையுடன் அரசியலில் ஈடுபடக்கூடிய யாராயினும் நாம் வரவேற்க வேண்டும். அந்தவகையில் பௌத்த மதகுருவாக இருப்பினும் திறமையான அரசியல்வாதி என்றால் நாம் வரவேற்கலாம்.
இன்னுமொன்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இலங்கையில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பௌத்த துறவிகள் இருக்கின்றார்கள் அவர்கள் அனைவரும் அரசியல் செய்யவில்லை. அதிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே அரசியலில் ஈடுபடுகின்றனர். இலங்கையில் பௌத்த துறவிகள் நேரடி அரசியலுக்கு வருவதற்கான அடிப்படை காரணங்களில் ஒன்றாக மர்ஹும் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்களால் தனி முஸ்லிம் அடையாளத்தோடு உருவாக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும், இலங்கையின் அரசையே தீர்மானிக்கும் பெரும் சக்தியாக மிகக் குறுகிய காலத்திற்குள் அதன் துரித வளர்ச்சியுமே ஆகும்.
அதன் காரணமாகவே ஜாதிக்க ஹெலே உரிமய உள்ளிட்ட கட்சிகள் ஊடாக பௌத்த பிக்குகள் நேரடி கட்சி மற்றும் தேர்தல் அரசியலுக்குள் வந்தார்கள். இப்போது அவர்கள் எதிர்காலத்தில் ஒரு பௌத்த குரு ஜனாதிபதியாக வேண்டும் எனும் நோக்கோடு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றார்கள்.
இஸ்லாத்தை எடுத்துக் கொண்டால் அது சம்பூரண மார்க்கம், இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விடயங்களையும் பற்றி பேசுகின்றது, வணக்க வழிபாடுகளை மட்டுமின்றி மனித வாழ்வின் அன்றாட செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் பற்றிப் பேசுகின்றது, அந்த வகையில் ஆட்சி அதிகாரம், அரசியல் நிர்வாகம் என அனைத்துக்குமாக தௌிவான வழிகாட்டல் இஸ்லாத்தில் உள்ளது.
இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மதத்தலைவராக மட்டுமின்றி ஆட்சியாளராகவும் இருந்தார். அவருக்கு பின்வந்த சஹாபாக்களும் (நபிகளின் தோழர்கள்) குர்ஆனையும் நபிகளாரின் வாழ்க்கை வழிகாட்டுதல்களையும் (ஹதீஸ்கள்) பின்பற்றி முன்மாதிரியான ஆட்சியாளர்களாக இருந்தார்கள். அந்தவகையில் கிறிஸ்த்தவ, பௌத்த மதங்கள் போலல்லாது இஸ்லாம் இஸ்லாமிய போதகர்கள் அரசியல் செய்வதற்காக தௌிவான வழிகாட்டியுள்ளது.
ஆனால் இலங்கையில் முஸ்லிம் தனி அடையாளங்களோடு உருவாக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இஸ்லாமிய மதத்தலைவர்களை நேரடி அரசியலில் ஈடுபடுத்தவில்லை, ஈடுபடவும் அழைக்கவில்லை. கிறிஸ்த்துவ சமயத்தவரிடமிருந்த ‘அரசியல் வேறு மதம் வேறு என்கிற மனநிலை வேரூன்றியிருக்கிறது. அனாலும் என்னைப் போன்ற சில மௌலவிமார் (இஸ்லாமிய மதத்தலைவர்கள்) அரசியலில் ஈடுபடுகின்றோம். முஸ்லிம் உலமா கட்சி எனும் அசியல் கட்சியையும் ஆரம்பித்து வெற்றிகரமாக நடாத்திச் செல்கின்றோம்.
கேள்வி 03: சாதாரண அரசியல்வாதியை விட ஒரு மௌலவி அரசியல் வாதியால் சமூகத்திற்கு என்னதான் விஷேடமாக செய்துவிட முடியும் என நினைக்கின்றீர்கள்?
முபாரக் மௌலவி : பெரும்பாலான அரசியல்வாதிகளிடம் இன, மத வேறுபாடின்றி பல ஒத்த பண்புகளை காணமுடியும், அதாவது பொய் வாக்குறுதி, லஞ்சம், ஊழல், மது, மாது, சூது என அனைத்துவிதமான கெட்ட பழக்கங்களும் காணப்படுகின்றது. அதனால் அவர்களது தனிமனித பண்புகள் மற்றும் நடத்தைகள் மட்டுமல்லாமல் அவர்கள் செய்யும் அரசியலும் ஒழுங்கீனமாக காணப்படுகின்றது. சமூகத்திற்கு பிரயோசனமோ இல்லையோ அவர்கள் செய்யும் அரசியல் அவர்களது வயிற்றையும் வங்கிக் கணக்குகளையும் நிரப்புவதற்கு பிரயோசனமாகவுள்ளது. தங்களுக்கு வாக்களித்த மக்களை வியாபாரப் பொருட்களாகவே பயன்படுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் தங்கள் மதங்களும் மார்க்கங்களும் போதிக்கும் போதனைகளை வாழ்க்கையில் எடுத்து நடக்காமையும் இறைவனுக்கும் சமூகத்திற்கும் பயப்புடாமையுமே இவற்றுக்கு காரணம்.
அவை அனைத்தையும் இஸ்லாம் அடியோடு வெறுக்கியது, அரசியல் உள்ளிட்ட அனைத்திற்குமாக மக்களுக்கு பயன்படக்கூடியவகையில் அழகிய முன்மாதிரியை வழங்குகிறது. அந்தவகையில் மனிதன் என்றவகையில் சில விதிவிலக்குகளைத் தவிர அனைத்து மௌலவிமார் இறைவனுக்கும் சமூகத்திற்கும் பயந்து செயற்படக்கூடியவர்களாக இருப்பர். மதத் தலைவர் என்ற வகையில் அனைத்து மத மக்கள் மட்டுமல்லாது ஏனைய மதத்தலைவர்களும் சமமாக மௌலவிமாரை மதிக்கும் நிலை உள்ளது. ஆகவே அதன் வழியில் சமத்துவமாகவும் சகோதரத்துவமாகவும் நல்லிணக்கத்துடனான அழகிய முன்மாதிரியான அரசியல் தலைமையை எம்மால் வழங்கமுடியும் என நம்புகின்றோம். எந்த தரப்பினருடனும் மக்களினதும் சமூகத்தினதும் உரிமைகள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பில் பேசி பெற்றுக் கொடுக்க முடியும். அது போன்ற பல விடயங்களை உலமா கட்சி கடந்த காலங்களில் செய்தும் காட்டியுள்ளது.
கேள்வி 04 :அண்மையில் கல்முனைப்பகுதியில் வாழும் தமிழ் சமூகம் தொடர்பான வெறுப்பூட்டும் கருத்து ஒன்றை முன்வைத்திருந்தீர்கள் அது ஒரு நல்லிணக்கத்தை விரும்பும் மதத்தலைவர், மாற்று அரசியல் செயட்பாட்டாளர் என அடையாளப்படுத்தும் உங்களால் எப்படி சொல்ல முடிந்தது?
முபாரக் மௌலவி: கல்முனை பிராந்திய அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அரசியலிலும் தமிழ் பிரதேச செயலகம் தொடர்பான விடயங்கள் பெரும் பேசுபொருளாக மட்டுமல்லாமல் போராட்ட வடிவமாகவும் உருப்பெற்றிருந்தமை யாவரும் அறிவோம். இதன்போது குறித்த பிரச்சினையை தமிழ்- முஸ்லிம் பிரச்சினையாக சித்தரித்து மீண்டும் தமிழ் – முஸ்லிம் உறவுகளுக்குள் சிக்கல்களை ஏற்படுத்த பல தரப்பினரும் முயற்சித்தனர். அதன் பின்னணியில் கல்முனை சமூகத்தைப் பற்றிய அறிவு கூட இல்லாத பல தமிழ் இளைஞர்கள் முகநூலில் வார்த்தைக்கு வார்த்தை கல்முனை முஸ்லிம்கள் கல்முனைக்கு வர்த்தகத்துக்காக வந்ததாகவும், பின்னர் கல்முனையை ஆக்கிரமித்ததாகவும் கூறி தொடர்ந்தும் ஆத்திரமூட்டியதாலேயே அவ்வாறு கூறியிருந்தேன்.
அதில் உண்மை இல்லாமலும் இல்லை. கல்முனையில் வாழ்ந்த வாழ்ந்துவரும் முஸ்லிம்களுக்கு ஊழியம் செய்வதற்காக பல குலந்தொழில்களைச் செய்யும் பலரை கல்முனை பகுதிக்கு கொண்டுவந்து குடியேற்றப்பட்டது. அவற்றை கடந்த 80ஆம் ஆண்டு வரை கண்ணால் கண்டோர் நாம்.
இவற்றையெல்லாம் சொல்லிக் காட்டுவதில் எனக்கும் விருப்பமில்லை. இருப்பினும் வார்த்தைக்கு வார்த்தை கல்முனை முஸ்லிம்கள் வர்த்தகத்துக்காக வந்ததாகவும் கல்முனையை ஆக்கிரமித்ததாகவும் கூறி ஆத்திரமூட்டுவதால் இவற்றை நான் சொல்ல வேண்டியுள்ளது.
கேள்வி 05: மதத்தலைவர் என்ற அடிப்படையிலும் அரசியல் செயற்பாட்டாளர் என்ற அடிப்படையிலும் இது போன்ற இனங்களுக்கு இடையில் வெறுப்பூட்டும் கருத்துக்கள், உங்களுடைய அரசியல் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்க செயல்பாடுகளுக்கு சவாலாக அமையாதா?
முபாரக் மௌலவி: அளவு மீறிய நாசகார பரப்புரைகளை திட்டமிட்டு முன்னெடுக்கும் குழுக்களுக்கு எதிராக சில நேரங்களில் திருப்பி அடிக்கவும் வேண்டியுள்ளது. எப்போதும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. நான் தனிநலம் பற்றி சிந்திக்காதவன். எனது குடும்பத்தில் கூட பலரை நேரடியாகவே இழந்திருக்கிறேன் ஆனாலும் இன்னமும் நான் தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபடுபவன். இருந்தும் முகநூலில் பல தமிழர்கள் முஸ்லிம்களை மிக மோசமாக எழுதுவதால் இப்படியான அதிரடி தாக்குதலும் தேவைதான் என நினைக்கிறேன்.
வியூகா 06: ஒரு விடயத்தை சாதாரண மனிதன் கையாள்வதற்கும் ஒரு மதத்தலைவர் கையாள்வதற்கும் வித்தியாசம் உண்டு அல்லவா? பொறுமை, சகிப்புத்தன்மை உள்ளிட்ட அழகிய முன் மாதிரிகளை வழங்கும் இஸ்லாமிய மதத்தலைவரான நீங்கள் இப்படி சொல்வதில் சிக்கல்கள் இல்லையா?
அதிலும் தேசிய ரீதியில் சர்வமத தலைவர்களோடு இணைந்து பல நல்லிணக்க செயற்பாடுகளிலும் சமூக, அரசியல் மாற்று உரையாடல்களிலும் பங்குபற்றும் நீங்கள் இப்படியான வெறுப்பூட்டும் கருத்துக்களை வெளியிடுவது எங்கனம் ஏற்புடையது?
முபாரக் மௌலவி: இதில் எந்த பிரச்சினையும் இல்லை என நினைக்கிறேன். நான் உண்மையே சொல்லியுள்ளேன். அதுவும் அசிங்கமில்லாத தமிழில் சொல்லியுள்ளேன். ஆதாமின் வாரிசுகளைத் தவிற அனைவரும் வந்தேரி குடிகளே, சிங்களவரும் இந்நாட்டுக்கு இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டு வந்தவர்களே என்பதையும் சொல்லியுள்ளேன். அவர்களுக்கும் அவர்கள் வரலாறு தெரியும். எனவே வரலாற்றை மறைக்க முடியாது அல்லவா.
கேள்வி 07: ஒரு மௌலவி (மார்க்க அறிஞர்) என்ற ரீதியில் பன்மைத்துவ சமூகங்கள் வாழும் பிரதேசங்களில் நல்லிணக்கத்தை எவ்வாறு கட்டியெழுப்பலாம் என்று நினைக்கின்றீர்கள்?
முபாரக் மௌலவி: எந்த மதங்களை எடுத்துக் கொண்டாலும் மனிதனை மனிதனாக வாழ்வதற்காகே போதனை செய்கின்றன. விசேடமாக எங்களைப்போன்ற இஸ்லாமிய மதகுருக்களுக்கு இஸ்லாம் பாரிய பொறுப்புக்களை வழங்கியிருக்கின்றது. அதில் ஒன்றுதான் நன்மையின்பால் மக்களை அழைப்பதாகும்.
ஆனால் இங்கு இஸ்லாத்தில் தௌிவில்லாத மக்கள் மத்தியில் ஒரு பிரச்சினை இருக்கிறது அதுதான் எது நல்வழி என்பது?.. சாதாரணமாக அடிப்படை மத அனுஸ்டானங்கள் மட்டுந்தான் நல்லவழி என்று புரிந்துகொண்டு மனிதனை மனிதன் கண்ணியப்படுத்துவது, பிற மதங்களை அவர்களின் நம்பிக்கைகளுக்கு மதிப்பளிப்பது போன்றவற்றுக்கு மாற்றமாக பெருவாரியானவர்கள் நடப்பதை பார்க்க முடிகிறது. இன்நிலை அனைத்து மத நண்பர்களிலும் பார்க்க முடியும்.
இதன் காரணமாகத்தான் கடந்தகாலங்களில் இலங்கையில் இனங்களுக்கிடையில் பாரிய இனப்பிரச்சினைகள் மற்றும் கலவரங்கள் இடம்பெற்றமையை பார்க்கமுடியும். இப்படியான அசாதாரண நிலைமைகளை தாங்கள் தாங்கள் மதங்களை 100 வீதம் நேசிக்கும் நபர்களே முன்நின்று செய்திருக்கின்றமையை நாம் அனைவரும் அறிந்தது. இது தங்களின் மதத்தின் மீதான தவறான புரிதலும், அணுகுமுறையும் கொண் வெளிப்பாடே தவிற வேறு ஒன்றுமில்லை..
ஆனால் அடிப்படையில் அனைத்து மதகுருமார்களுக்கு நன்மையை ஏவி தீமையை தடுக்கும் பாரிய பொறுப்பு இருக்கிறது. அதனை இந்தநாட்டிலே பொரும்பாலான மதகுருமார்கள் உணர்ந்து செயற்படுகிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்வேண்டும்.
கேள்வி 08: இலங்கையில் இனங்களுக்கிடையிலான இன்றைய நிலை, அன்றைய நிலை, இரண்டு நிலைளுக்குமிடையிலான மாற்றங்களில் செல்வாக்குச் செலுத்தியுள்ள காரண காரியங்கள்? அவைதொடர்பில்?
முபாரக் மௌலவி: இலங்கையில் இனங்களுக்கிடையிலான இன்றைய நிலைக்கும் சுமார், 100 வருடங்களுக்கு முன்னரான நிலைக்கும் இடையில் பெரிய வித்தியாசத்தை காணவில்லை. அன்றும் இனங்களுக்கிடையில் போட்டி, பொறாமை, எரிச்சல், வஞ்சகம் என்பன இருந்தது போல் இப்போதும் இருக்கிறது. ஒரேயொரு வித்தியாசம் இன்று அவை அதிகரித்துள்ளன. இதற்கு காரணம் கட்டுப்படுத்தப்படாத ஊடக மற்றும் சமூக வலைத்தளங்களாகும். அத்துடன் இலங்கை உள் விவாகாரங்களில் வெளித்தலையீடும் பிரதான காரணமாக இருக்கிறது.
இலங்கையின் அன்றைய இனவாம் என்பது சிங்களவரே ஆள்பவர்களாக இருக்க வேண்டும் என்ற அநாகரிக்க தர்மபால எனும் மத போதகரால் இனங்களுக்கிடையில் மோதல் உருவாகியது. குறிப்பாக முஸ்லிம் சிங்கள மோதல் உருவாகியது. பின்னர் இது சிங்கள தமிழ், அதன் பின் சிங்களவா் தமிழர் மற்றும் முஸ்லிம்களுக்கெதிராக அதன் பின் சிங்கள தமிழ் ஆயுத மோதல் அதனைத் தொடர்ந்து தமிழர் முஸ்லிம்களுக்கிடையிலான மோதல், அண்மைக்காலமாக சிங்கள முஸ்லிம்களுக்கிடையிலான பாரிய மோதல் என வளர்ந்துள்ளது.
இவற்றுக்கு பிரதான காரணம் உலகளாவிய ஊடக மாபியாவாகும். அதனை இலங்கையில் உள்ள சில சிங்கள ஊடகங்களும் சில பௌத்த சமய தலைவர்களும் முன்னெடுக்கின்றனர்.
சிங்கள மொழி ஊடகங்கள் பௌத்த சமயத்தலைவர்களின் முஸ்லிம் மக்களுக்கெதிரான கருத்துக்களை முன் வைக்கும் போது அவற்றுக்கு மாற்றீடான முஸ்லிம்களுக்கு கருத்துக்களை அல்லது பதில்களை இருட்டடிப்பு செய்கின்றன. அத்துடன் அரசியல்வாதிகளும் முஸ்லிம் இனவிரோத பேச்சுக்களை பேசுவதன் மூலம் தமது இனத்தின் வாக்குகளை தம் பக்கம் திருப்பலாம் என எண்ணி செயற்படுகின்றன. இவற்றை நீக்கி இன நல்லிணக்கத்திற்கான தீர்வுகளுக்கான முன் மொழிவுகளை நாம் தொடர்ந்தும் முன் வைத்து வருகின்றோம்.
கேள்வி 09: இலங்கையின் பல்லின சமூகங்களின் மத்தியில் நல்லிணக்கம், சகவாழ்வு, சகிப்புத்தன்மை, சமத்துவம் மற்றும் சகோரத்துவம் உள்ளிட்ட கூறுகள் இப்போது அரசியல் மற்றும் இனவாதத்தின் பெயரால் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இவை தொடர்பில்?
முபாரக் மௌலவி: பல தீர்வுகளையும் முன் மொழிவுகளை முஸ்லிம் உலமா கட்சி முன் வைத்து வருகிறது. அண்மையில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமனவின் வேண்டுதலுக்கு இணங்க பின் வரும் முன் மொழிவுகளை நாம் ஒப்படைத்துள்ளோம்.
1. அரசியல் சாசனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களின் மத, கலாசார உரிமைகள் பாதுகாக்கப்படும் விடயத்தில் அரசு நீதியாக செயற்படும் உத்தரவாதம் தரப்பட வேண்டும்.
2. நாட்டில் எந்தவொரு இன, மத மக்களுக்கெதிராக யாரும் குறிப்பாக மத தலைவர்கள், அரசியல்வாதிகள் வெறுப்பூட்டும் பேச்சை பேசினால் அவர்கள் யாராக இருப்பினும் கைது செய்யப்பட வேண்டும்.
3. அளுத்கம கலவரம் முதல் மினுவாங்கொடை வரை நடை பெற்ற கலவரத்தின் சூத்திரதாரிகள் விசேட ஆணைக்குழுவின் மூலம் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
4. முஸ்லிம் நாடுகளுக்கான தூதுவர்களாக முஸ்லிம்கள் நியமிக்கப்பட வேண்டும்.
5. பௌத்த மக்கள் வாக்காளர்களாக இல்லாத பிரதேசத்தில் சிலை வைப்பது, முஸ்லிம்கள் வாக்காளர்களாக இல்லாத பகுதியில் பள்ளி கட்டுவது போன்றவை தடை செய்யப்பட வேண்டும். அவ்வாறு ஏதும் இருந்தால் அவற்றை நீக்கும் தைரியம் உள்ளதாக அரசு இருக்க வேண்டும்.
6. வடக்கையும் கிழக்கையும் இணைக்காத நிலையில் தமிழர்களும் முஸ்லிம்களும் திருப்தி கொள்ளும் வகையிலான அரசியல் தீர்வு அவசியம்.
8. மாகாண சபை முறை கலைக்கப்பட்டு மாவட்ட சபைகள் அமைக்கப்படுவதை உலமா கட்சி வரவேற்கிறது. மாவட்ட சபைக்கு ஒரு முதல் அமைச்சர், 4 அமைச்சர்கள் என நியமிக்கப்படலாம்.
8. முஸ்லிம் பெண்களுக்கான கௌரவத்தை அரசு பாதுகாக்க வேண்டும். முகம் மறைத்தல் தவிர்ந்த எத்தகைய ஆடையையும் அணியும் சுதந்திரம் அவர்களுக்கு வழங்க வேண்டும்.
9. நாட்டில் அனைத்து வகை தீவிரவாதமும் ஒழிக்கப்பட வேண்டும்.
10. இனங்களுக்கிடையிலும் மதங்களுக்குமிடையில் சௌக்யத்தை ஏற்படுத்தும் வகையில் அனைத்து சமயத்தலைவர்களையும் உள்ளடக்கிய ஜனாதிபதி அல்லது பிரதமர் தலைமையிலான ஆலோசனை சபை அமைக்கப்பட வேண்டும். இதன் உறுப்பினர்கள் சகல சமயத்திலிருந்தும் சமமான எண்ணிக்கை கொண்டிருக்க வேண்டும்.
11. யுத்த காலத்தில் வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் இழந்த காணிகள் திரும்ப வழங்கப்பட வேண்டும்.
11. நாட்டில் இரண்டு உப ஜனாதிபதிகள் இருக்க வேண்டும். ஒருவர் முஸ்லிம் இன்னொருவர் தமிழர். இவர்களும் ஜனாதிபதி தேர்தலின் போது அந்தந்த இனத்தவரால் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்கள் முன்னாள் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கக் கூடாது. ஆகக்குறைந்தது பட்டதாரியாக இருக்க வேண்டும்.
13. 1992ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மௌலவி ஆசிரிய நியமனம் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் 2010ல் வழங்கப்பட்டபின் இன்னமும் வழங்கப்படவில்லை. அந்நியமனம் வழங்கப்பட வேண்டும் என்பதுடன் அதற்கான போட்டிப்பரீட்சை சமயம் சார்ந்ததாகவும் சமயம் சார்ந்த மொழியிலும் இருக்க வேண்டும். இதனை கண்காணிக்கும் அதிகாரம் உலமா கட்சிக்கு வழங்க வேண்டும்.
13. அரபு மதுரசாக்கள் அனைத்தும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டதாகவும் அவற்றில் கற்று வெளியேறிய பின் அரசாங்கத்தினால் விசேட பொதுப்பரீட்சை நடத்தப்பட்டு மௌலவி தராதர பத்திரம் வழங்கப்பட வேண்டும். மதுரசாவில் சேர்க்கப்படும் மாணவர்கள் குறைந்தது ஆண்டு 9 வரை பொது பாடசாலையில் கல்வி கற்றவராக இருக்க வேண்டும். மதுரசாக்களின் கல்வி ஆண்டு 5 வருடத்துக்கு மேற்பட கூடாது. மதுரசா முடித்தோருக்கு மௌலவி பட்டம் வழங்காமல் உயர் கல்வி டிப்ளோமா பத்திரம் வழங்கப்பட்டு பின்னர் முஸ்லிம் சமய கலாசார அமைச்சினால் பொது பரீட்சை வழங்கப்பட்டு மௌலவி சான்றிதழ் வழங்க வேண்டும். இதனை பெற்றவர்களையே அரசு பள்ளிவாயல்களின் இமாம்களாக நியமிப்பதுடன் அவர்களுக்கான சம்பளத்தை அரசு வழங்க வேண்டும்.
14. அனைத்து இன பெண்களுக்கு மட்டுமான பல்கலைக்கழகம் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
15. கல்முனை பிரதேச செயலக பிரச்சினையை தீர்க்கும் வகையில் கல்முனை பிரதேச செயலகத்தை இரண்டாக பிரித்து கல்முனை ஸாஹிரா கல்லூரி முதல் தாளவெட்டுவான் வரை கல்முனை பிரதேச செயலகம் என்றும் 99 வீதம் தமிழ் மக்கள் வாழும் பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பை இணைத்து பாண்டிருப்பு பிரதேச செயலகம் என்றும் வழங்கி இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
உங்கள் அரசியல், சமூகம் சார்ந்த கருத்துகளை எம்மோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் மௌலவி அவர்களே.
No comments:
Post a Comment