முர்ஷித்
இலங்கையின் சமகாலத்தில் ஸ்திரமற்ற அரசியல் மற்றும் பொருளாதார நிலை தொடர்வதற்கு சில மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சில அரசியல் கட்சிகளின் முறையற்ற செயற்பாடுகளே காரணமாக அமைந்திருக்கிறது.
அந்த வகையில் அடிக்கடி கட்சி மாறும் பிரதிநிதிகள், அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரமிக்கவர்கள், ஊழல், மோசடி, சொத்துக்குவிப்பு மற்றும் கொள்கையற்ற அல்லது வாக்குமாறும் தன்மை உள்ளிட்ட பல்வேறு மக்களின் ஆணைக்கு மாற்றமாக மற்றும் தான் தோன்றித்தனமாக செயற்படும் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளை குறிப்பிட முடியும்.
இதற்கு எதிராக செயற்பட்டு நல்லதொரு அரசியல் கலாசாரத்தை கட்டமைப்பது காலத்தின் கட்டாயமாகும். அதற்கு வளர்ந்த பல ஜனநாயக நாடுகளில் நடைமுறையில் இருக்கும் மீள் அழைத்தலுக்கான உரிமை சட்டம் (Right to Recall Act ) போன்று மக்கள் பிரதிநிதிகளாக ஆணை வழங்கிய மக்களே குற்றம் சாட்டப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை மீள் அழைத்துக்கொள்ளக்கூடிய சட்ட ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறான சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் பல்வேறு காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் மங்களசமரவீர உள்ளிட்ட முன்மாதிரி அரசியல்வாதிகளினாலும் அழுத்தக்குழுக்களினாலும் பல்வேறு உரையாடல்கள் நடைபெற்றாலும் ஊழலில் கொழுத்த அரசியல்வாதிகளும் அதிகாரமிக்கவர்களும் அதனை சாத்திப்படுத்துவதற்கு தடையாக இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
மீள் அழைத்தலுக்கான உரிமை சட்டம் (Right to Recall Act) என்றால்?
மீள் அழைத்தலுக்கான உரிமை சட்டம் (RTR Act) என்பது வாக்காளர்கள் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை அவரது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே பதவியில் இருந்து நீக்கக்கூடிய ஒரு செயல்முறையாகும்.
இது சுவிஸலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நேரடி ஜனநாயக நாடுகளில் மீள் அழைத்தலுக்காக மக்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டமாக இருக்கிறது.
இந்த அதிகாரம் பொதுவாக ஊழல், தவறான நடத்தை அல்லது தனது கடமைகளை நிறைவேற்றத் தவறியது மற்றும் வாக்கு மாறுதல் போன்ற தீவிர குற்றங்களுக்கு எதிராக வழங்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில், 19 மாநிலங்களும் கொலம்பியா மாவட்டமும் மாநில மற்றும் உள்ளூர் பிரதிநிதிகளுக்கு எதிராக Right To Recall விதிகளைப் பெற்றுள்ளமையை பிரசித்தமாக பார்க்க முடியும்.
மீள் அழைத்தலை (Recall) தொடங்க, வாக்காளர்கள் பொதுவாக ஒரு மனுவில் 25 % க்கும் அதிகமாக கையொப்பங்களை சேகரிக்க வேண்டும். போதுமான கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டால், மீள் அழைத்தல் (Recall) தேர்தல் நடத்தப்படும்.
இந்தச் சட்டம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு பொருந்தும்.
சில சமயங்களில், மீள் அழைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி மீள் அழைத்தல் தேர்தலின் வெற்றியாளராகிறார்; சில சமயங்களில், அடுத்த வழக்கமான முறையில் தேர்தல் நடைபெறும் வரை குறித்த பதவி வெற்றிடமாக இருக்கும்.
மீள் அழைத்தல் முறைகள் பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்கிறது, ஆனால் அவை துஷ்பிரயோகம் செய்யப்படும் வாய்ப்புக்களும் உள்ளன.
அவை சிறப்பு நலன்களால் பிரபலமற்ற மக்கள் பிரதிநிதிகளை குறிவைக்கப் பயன்படுத்தப்படலாம் அல்லது அதிருப்தியடைந்த வாக்காளர்களால் சட்டபூர்வமான தேர்தலின் முடிவுகளை மாற்றியமைக்கப் பயன்படுத்தப்படலாம்.
உலக அரசியலில் பல வளர்ந்த நாடுகள் மீள் அழைத்தலுக்கான உரிமைச் சட்டத்தினை (RTR Act) பயன்படுத்திய பல சந்தர்ப்பங்கள் உள்ளன. அவற்றுக்கான சில :
1) அமெரிக்காவில், முதல் மீள் அழைத்தல் தேர்தல் 1908 இல் கலிபோர்னியாவில் நடத்தப்பட்டது. அப்போதிருந்து, அமெரிக்காவில் 1,000 க்கும் மேற்பட்ட மீள் அழைத்தல் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன, ஆனால் பிரதிநிகளின் ஒரு சிலர் மட்டுமே வெற்றிகரமாக மீள் அழைகுகப்பட்டுள்ளனர்..
2)கனடாவில், முதல் மீள் அழைக்கும் தேர்தல் 1912 இல் பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடத்தப்பட்டது. அப்போதிருந்து, கனடாவில் 100 க்கும் மேற்பட்ட மீள் அழைக்கும் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன, ஆனால் பிரதிநிதிகள் ஒரு சிலர் மட்டுமே வெற்றிகரமாக மீள் அழைக்கப்பட்டுள்ளனர்.
3)சுவிட்சர்லாந்தில், மீள் அழைத்தல் தேர்தல் முறை 1847 முதல் நடைமுறையில் உள்ளது. சுவிட்சர்லாந்தில் மீள் அழைத்தல் தேர்தல்கள் ஒப்பீட்டளவில் பொதுவானவை, மேலும் தேசிய மற்றும் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளை மீள் அழைக்க பயன்படுத்தப்பட்டுள்ளன.
4) இந்தியாவில் 73 மற்றும் 74 ஆவது திருத்தச்சட்டங்களுக்கு அமைவாக (RTR Act) மீள் அழைத்தல் முறை சட்டமாகக்கப்பட்டது. அது பெரிய அளவில் நடைமுறைக்கு வரவில்லை இருப்பினும் சில சந்தர்ப்பங்களில் அது பயன்படுத்தப்பட்டுள்ளது.
மீள் அழைத்தலுக்கான உரிமை (Right To Recall) முறைகள் சர்ச்சைக்குரிய தலைப்பாக இருக்கலாம், ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை பொறுப்புக்கூற வைக்க அவை ஒரு முக்கியமான கருவியாக இருக்க முடியும்.
இலங்கையில் மீள் அழைத்தலுக்கான உரிமை சட்டம் தேவைப்படுவதற்கான சில முக்கிய காரணங்கள்.
இலங்கையை பொருத்தமட்டில் காலத்துக்கு காலம் பல்வேறு மக்கள் பிரதிநிதிகள் தொடர்பில் சர்ச்சைகளும் குற்றச்சாட்டுக்களும் எழுந்த வண்ணமே உள்ளன. இதன்மூலம் பல்வேறு விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்பட்டவாறே உள்ளன. அவற்றை கட்டுப்படுத்த இப்படியான சட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும். அந்த வகையில்;
1)ஜனநாயகத்தை வலுப்படுத்துதல்:
மீள் அழைத்தலுக்கான உரிமை சட்டம் என்பது மக்களுக்கு தங்கள் பிரதிநிதிகளைக் கட்டுப்படுத்தவும், அவர்களின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க வைக்கவும் ஒரு வழியை வழங்குகிறது. இது அதிகாரத்தை மக்களிடம் கொண்டு வந்து, அரசாங்கத்தை ஜனநாயகமாக மாற்ற உதவுகிறது.
2)ஊழலைக் குறைத்தல்:
மீள் அழைத்தலுக்கான உரிமை சட்டம் என்பது ஊழல் மற்றும் தவறான நடத்தை புரிந்த பிரதிநிதிகளை நீக்குவதற்கான ஒரு வழியை வழங்குகிறது. இது ஊழலைக் குறைக்கவும், அரசாங்கத்தை திறமையாகவும் செயல்திறன் மிக்கதாகவும் மாற்ற உதவுகிறது.
3) மக்களுக்கான பொறுப்பை அதிகரித்தல்:
மீள் அழைத்தலுக்கான உரிமை சட்டம் என்பது பிரதிநிதிகள் மக்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது. இது அவர்களை தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவும், மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் தூண்டுகிறது.
4. வாக்கு மாறும் மக்கள் பிரதிநிதிகள் :
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பல அரசியல்வாதிகள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும் விடயம் தற்போது சர்வ சாதாரணமாக ஆகிவிட்ட நிலையில். குறித்த அரசியல்வாதிகள் மீதான மக்களின் அதிருப்தி, Right to Recall Act தேவைக்கான ஒரு முக்கிய காரணமாகும்.
5.அரசாங்கம் அல்லது ஆட்சியாளன்கள் மக்கள் நலன்களைப் புறக்கணிக்கின்றமை:
இலங்கை அரசாங்கம் அல்லது ஆட்சியாளன்கள் சில சமயங்களில் மக்களின் நலன்களைப் புறக்கணித்துள்ளமையினால். Right to Recall Act என்பது அரசாங்கத்தை மக்களுக்கு பொறுப்பேற்க வைக்க உதவும் ஒரு வழியாகும்
இலங்கையில் மீள் அழைத்தலுக்கான உரிமை சட்டம் பற்றி உரையாடல்களை தொடர்வதற்கும் அதனை சட்டமாக நிறைவேற்றி நடைமுறைப்படுத்துவதற்கும் சாதகமான சூழல் நிலவும் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்த சிவில் அமைப்புக்களும் மக்களும் அழுத்தங்களை பிரயோகிக்கவேண்டும்.
மீள் அழைத்தலுக்கான உரிமை சட்டமானது மக்களுக்கு தங்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியை வழங்குகிறது. இது அரசாங்கத்தை பொறுப்பானதாக மாற்றவும், ஜனநாயகத்தை வலுப்படுத்துதத்திற்கும் உதவுவதன் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்தையும் நிமிரச்செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment