Thursday, 27 July 2017

சமூகங்களுக்கிடையில், இலக்கியம் சமரசத்தை வளர்க்காது.!-இலக்கிய செயற்பாட்டாளர் றியாஸ் குரானா

முர்சித் முகம்மது

'இனங்களுக்கிடையில் சமரசத்தை வளர்ப்பதுதானா இலக்கியத்தின் பணி? இது ஒரு சிக்கலான கேள்வி. ஆனால், இலக்கியத்திற்கு இப்படி சமரசத்தை உருவாக்கும் ஆற்றல் இருக்கிறது என சிறுபிள்ளைத்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது பிற்போக்கான நம்பிக்கை மாத்திரமே.'

றியாஸ் குரானா
றியாஸ் குரானா(42) தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு கலகக் காரனாக அறியப்படும் இவர்இலங்கையின் கிழக்கிலுள்ள அக்கரைப்பற்று எனும் சிறுகிராமத்தைச் சேர்ந்தவர்.  இலக்கிய வாசகன், கவிஞன், விமர்சகன் என பரந்தபட்ட தளங்களில் இயங்குபவர். இதுவரை 5 புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்குமிவர், பெருவெளி இலக்கியச் சிற்றிதழின்நிறுவனர்களில் ஒருவர். தமிழ்மொழி தவிர்ந்த பல பிறமொழிகளில் இவரதுகவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதிலும், ஆங்கிலத்தில்  மொழிபெயர்க்கப்பட்டு poemhunter, allpoetry, poetrysoup,muse india போன்ற இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. நவீனத்துவம், பின்நவீனத்துவம் சார்ந்து தொடர்ச்சியாக உரையாடுவதோடு,  கவிதையியல் தொடர்பான கோட்பாட்டுரீதியிலான கட்டுரைகளையும்எழுதிவருகிறார்.

த கட்டுமரன் : தமிழ் இலக்கியச் சூழலின் வரலாறு சார்ந்து, உங்களுடைய பார்வை எத்தகையதாகவுள்ளது?
றியாஸ் குரானா : தமிழ் இலக்கியம் சார்ந்த வரலாற்றுரீதியலான பார்வை என்பது மிக சிக்கலான ஒன்று. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. தமிழ் இலக்கியம் என்பது இரண்டாயிரம் வருடங்களுக்கு அதிகமான காலத்தைக்கொண்டிருப்பது முதலாவது விசயம். இரண்டாவது விசயம், அனைத்து மொழிகளிலும் இலக்கியம் என்பது பலவகையான போக்குகளையும், வரலாற்று குழப்பங்களையும் கொண்டிருப்பதைப்போல தமிழ் இலக்கியங்களுக்குமுண்டு.
வரலாறு என்பது புனைவுதான் என பின்நவீன சிந்தனையாளர்கள் அறிவித்து விவாதங்களை மேற்கொண்ட பின்னர், ஏற்பட்ட முக்கியமான குழப்பமாக இதைக்கருதலாம். அரசர்களினதும், அதிகாரத்தை தம்வசம் வைத்திருந்தவர்களும்தான் இந்த வரலாற்றை தீர்மானிக்க காரணமாக இருந்தனர். அவர்கள் தாங்கள் விரும்பிய வரலாற்றை, தாங்கள் விரும்பிய கோணங்களிலிருந்து முன்வைத்தனர். ஆக, தமிழ் இலக்கியத்தினை வரலாற்றுரீதியிலான ஒரு பார்வைக்குட்படுத்துவது, பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே சாத்தியமானது. ஏனெனில், அவர்கள் வெறுமனே ஒரு தொழிலைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு தகுதியாக மட்டுமே இருக்கும்படி பாதுகாத்துக்கொள்கிறார்கள்.

அதற்கு அப்பால், மாற்றுவரலாறுகள் ஆங்காங்கே முன்வைக்கப்பட்டிருந்தாலும், அந்த வரலாற்றை எழுதுமளவு போதிய இலக்கியப் பிரதிகள் இல்லை. இன்று தமிழில் இருக்கின்ற தொகுக்கப்பட்ட அனேக இலக்கியங்கள் ஒரு தேர்வுசார்ந்தது மட்டுமே. இதற்கு அப்பால், மிக அதிகமான இலக்கியங்கள் அழித்தொழிக்ப்பட்டிருக்கின்றன. எஞ்சியிருப்பவை அதிகாரங்களுக்கும், அந்தக்காலங்களில் ஆட்சியிலிருந்த அரசுகளுக்கும் சார்பானது எனக்கருதப்பட்டவைகளும், தங்களுக்கு பாதிப்பற்றது என கருதப்பட்வைகளும்தான். சமண, வைணவ இலக்கிய மாற்றுக்குரல்கள் முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. அதைவிடவும், இங்கு அத்துமீறி நாடுகளை சுரண்டிய ஐரோப்பிய நாடுகளும் இந்த இலக்கியங்களைத் தொகுப்பதில் பல தடைகளையும், தணிக்கைகளையும் விதித்திருக்கிறது என்பதுதான் வரலாறு. ஆக, வரலாற்றுரிதிலான பார்வை என்பது இலக்கியத்தைப் பொறுத்தமட்டில் பெரும்சிக்கலான ஒன்றுதான்.

த கட்டுமரன் : இந்த இடத்தில், மாற்று வரலாறுகள் பற்றி எமது பல்கலைக்கழகங்கள் தமது ஆய்வுக்குட்படுத்தும் சூழலை உருவாக்கவில்லை என்று எண்ணுகிறீர்களா?
றியாஸ் குரானா: எமது பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை இலக்கியமென்பது பரீட்சைக்கு தயார் செய்யும் ஒரு நடவடிக்கையாக மட்டுமே இருக்கின்றது. அங்கிருப்பவர்கள் இலக்கியச் செயற்பாட்டாளர்களல்ல. கேள்விகளை எதிர்கொள்ளும் மாணவர்களாக மட்டுமே இருக்கின்றனர். ஆக, மாணவர்கள் தாங்கள் குறித்த பாடத்தில் சித்தியடைய என்ன செய்யவேண்டுமென்று சொல்லப்படுகிறதோ அதை அக்கறைகொள்பவர்கள் மட்டுமே. அதேநேரம், அங்கிருக்கின்ற பேராசிரியர்களும் தொழில்முறை சார்ந்தவர்கள்தான். அவர்களுக்கு இலக்கியம் கற்பிப்பதென்பது ஒரு தொழில். அது அவர்களின் வாழ்வாதாரத்திற்கான பணத்தை தருகிறது. ஆக, இதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அவைகளைமட்டுமே செய்தால்போதும். இலங்கையைப் பொறுத்தளவில் இலக்கியங்களும், கருத்தியல்களும் தமிழ்ச்சூழலில் அறிமுகமானதும், விவாதிக்கப்பட்டதும் “ சிற்றிதழ்கள்” என்கின்ற பல்கலைக்கழக நிறுவனத்திற்கு வெளியே இருந்த இலக்கியம் சார் இதழ்களினூடாகத்தான்.
அந்த இதழ்களில் விவாதிக்கப்பட்டு ஓரளவு சூழலில் முக்கியமானதுதான் “இது” என்ற நிலவரம் வரும்போது, இந்தப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அவைகளை தங்களின் பேசுபொருளாக எடுததுக்கொண்டு ஒரு ரவுண்ட் வரத்தொடங்குவார்கள்.
ஆனால், ஈழத்தில் இதுகூட சாத்தியமற்றிருப்பதும், கவனத்திற்கொள்ளாதிருப்பதும்தான் வேடிக்கையான ஒரு விசயம். அமைப்பியல், பின் அமைப்பியல், பின்நவீனத்துவம் என 80 களுக்குப்பிறகு தமிழில் வந்த எந்த கலைஇலக்கியக்கோட்பாடுகளும் ஈழத்து பல்கலைக்கழகங்களில் ஒரு பாடமாக ஆக்கப்படவே இல்லை என நினைக்கிறென். அல்லது கவனிக்கப்படாமலே கிடக்கிறது என நினைக்கிறேன். ஒன்று அல்லது இரண்டு கேள்விகளுக்கான ஒரு சிறிய விளக்கமாகத்தான் இந்தக் கருத்தாக்கங்கள் படிப்பிக்கப்படுகின்றன என்றும் கருதுகிறேன்.

சிங்களமொழியில் இதற்கு மாற்றமான ஒரு நிலை இருப்பதாக சொல்கிறார்கள். அப்படியானால், தமிழ் மொழிப் பல்கலைக்கழகங்கள் பரிதாபத்திற்குரியன என்றுதான் சொல்ல வேண்டும். அதேநேரம், இந்தக் கருத்துநிலைகளை பேசக்கூடிய விரிவுரையாளர்களும் குறைவு என்றே சொல்கிறார்கள். அனேகமாக, இந்தப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பாடசாலை ஆசிரியரைவிட வேறுபட்டவரகளாக எனக்குத் தோன்றவே இல்லை.
இங்கிருக்கின்ற கல்விமுறைகூட அதற்கொரு காரணம் எனலாம். மாற்றுக்கல்வியை முன்வைத்து இயங்கிய பவ்லோ ஃப்ரைரே போன்றவர்கள், இந்தக் கல்விமுறையை “வங்கிமுறை”க்கல்வி என அழைப்பார். அவரின் விடுதலைக்கான கல்வி என்ற கருத்துருவாக்கங்கள்கூட இங்கு கவனத்திற்கொள்ளப்படவேயில்லை என்று நினைக்கிறேன். ஆசிரியர் அனைத்தும் தெரிந்தவர், மாணவர்கள் கற்றுக்கொள்ளும் நிலையிலிருப்பவர்கள். பரீட்சைக்கான கேள்விகளுக்கு பதில்களை நினைவில் வைத்திருத்தல் அவ்வளவுதான்.
குறித்த கேள்விகளை எதிர்கொள்ளும் கால நேரத்திற்கும், அக்கேள்விகளுக்கு யார் யாருக்கெல்லாம் பதில்கள் நினைவுக்கு வருகிறதோ அவர்கள் “கெட்டிக்காரர்கள்” அவ்வளவுதான். சில பல்கலைக்கழகங்களில், சமகால சிறுகதையாசிரியரென்றால், அது புதுமைப்பித்தன்தான். ஒரு நகைச்சுவைக்காக இப்படிச் சொல்கிறேன். இலக்கியத்தில் உலகளவில் நடைபெற்றிருக்கும், நடைபெற்றுவரும் மாற்றங்கள் பற்றியெல்லாம் மாணவர்களுக்கு தேவையில்லைய என நினைப்பது என்னவகையான மனநிலை? பாடத்திட்டம்? பழங்காலத்திலிருந்த, குரு சீடன் முறையான மரபான கல்விமுறையே இதைவிடச் சிறந்தது எனலாம்.

த கட்டுமரன் : இந்த நிலையில் தமிழ் இலக்கியம் கடக்கவிருக்கும் பாதை எப்படி இருக்கப் போகிறது? உங்கள் கருத்து என்ன?
றியாஸ் குரானா: கடக்கவிருக்கும் பாதை என்று தமிழ் இலக்கியத்தை முன்னிறுத்தி வியாக்கியானம் செய்வதென்பது, கிட்டத்தட்ட ஜோசியம் சொல்வதற்கு நிகரான ஒன்றுதான். எனினும், மற்றவர்களைவிட சற்றும் வேறுபட்ட விதத்தில் ஒரு சுவரஸ்யமான முறையில் விபரிக்கலாம் என நினைக்கிறென்.
ஐரோப்பிய நாடுகள், சுரண்டுவதற்காகவும், பொருளாராதாரரீதியில் தங்களை நிலைநிறுத்துவதற்காகவும், மிகக்கீழ்த்தரமான முறையில் பிறநாடுகளை நடாத்தினாலும், அவர்களோடு கொண்டுவரப்பட்ட “நவீனத்துவ” சிந்தனைமுறைகளும் தமிழ் இலக்கியத்தை பாதித்தன என்பதுதான் உண்மை. இன்று தமிழில் இருக்கின்ற நாவல், சிறுகதை, நவீன கவிதை, விமர்சன முறைமைகள், கோட்பாட்டுரீதியிலான அணுகுமுறைகள், எனத்தொடங்கி ஜனநயாகம் போன்ற அரசியல் கருத்தாங்கங்கள்கூட தமிழ் மொழிக்கு வெளியில் இருந்து வந்தவைதான். அதற்கு முன்பு, சமஸ்கிரத மொழியின் தாக்கத்தில் தமிழ் இலக்கியம் இருந்தது என்பதும் இங்கு முக்கியமானது. ஆனாலும், இவைகளுக்கு அப்பால், தமிழ்மொழிக்கென்று கோட்பாடுகளும், கவிதை முறைமைகளும் இல்லாமலில்லை. அதேநேரம், தமிழ்மொழி, தனக்கு வெளியிலிருந்து வந்த அனைத்தையும் உள்ளெடுத்தது என்று சொல்லிவிடவும் முடியாது. தனக்கு பாதிப்பற்ற வகையில்தான் அவைகளைக் கையாண்டது என்பதுதான் வரலாறு.
ஆக. எதிர்காலத்தில், தனது பாதை என்பது உலகுதழுவியதாக அமையும் எனச் சொல்லலாம். அதற்கான தேவையும் உண்டு என்பதை அனைவரும் அறிவர்.

த கட்டுமரன் : மேலைத்தேய இலக்கியங்களோடு தமிழ் இலக்கியங்களுக்கு இருக்கும் உறவுநிலை பற்றிய உங்களுடைய புரிதல் என்ன?     
றியாஸ் குரானா : தமிழ் இலக்கியத்தை மிக அதிகம் பாதித்தது ரஷ்ய இலக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் அதிகளவு மொழிபெயர்க்கப்பட்டிருப்பதும், அதுதான். இருபதாம் நூற்றாண்டு உலகெங்கும் பலமொழிகளில் ரஷ்ய இலக்கியத்திற்கு பெரும் கவர்ச்சி இருந்தது. அதற்கு தமிழும் விதிவிலக்கல்ல. இன்றுகூட அதன் தாக்கம் மிகவும் பாரதூரமான நிலையிலே இருக்கிறது. சோசலிச யதார்த்தவாதம், என்பது ஒரு கருத்துநிலை. அதாவது இலக்கியம் மற்றும் அரசியல் சார்ந்த கருத்துநிலை என்பதை மறந்து, அதுதான் இயற்கையானது என்று பலர் நம்பும்படி மாறியிருக்கிறது. பிரதிபலிப்பு, என்பதையே இலக்கியச் செயல் என இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் நிலையும் நீடிக்கிறது. அதாவது, இலக்கியம் என்பது நிலவுகிறசூழலை அப்படியே எழுத்தில் பிரதிபலித்தல் என்றும், மிச்சமின்றி அனைத்தையும் பிரதிபலிக்க முடியும் என்ற நிலையை சிந்தனையின்றி ஏற்றுக்கொள்ளும் நிலைவரை இட்டுச்சென்றது என்பதுதான் உண்மை. ஒருவகையில் இது தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த சாபமும்கூட.

90களில், ரஷ்யாவின் உடைவுதான், ஓரளவு தமிழ்மொழியை சுதாகரித்துக்கொண்டு புதிய திசைகளை நோக்கி நகர வேண்டிய தேவையை உணர்த்தியது எனலாம். ஆனால், தொண்ணூறுகளுக்கு முன்பே, இந்த இலக்கிய நிலவரங்களுக்கு மாற்றமான ஒரு போக்கு தமிழில் முன்னெடுக்கப்பட்டதுதான் எனச் சொல்லவேண்டும். இருத்தலியம், அமைப்பியல், பின் அமைப்பியல், என தொடரும் கருத்தியல் நிலவரங்கள் இலக்கியம் குறித்த கருத்துநிலைகளில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தாமில்லை. அதன் பிறகு பின்நவீனத்துவம் தமிழைச் சந்தித்தபோது, தமிழ் இலக்கியம் என்ற முன்வைப்பு கலகலத்துப்போயிற்று. தமிழில் இலக்கியங்கள் என்பதாக அது மாற்றமடைந்தது. அதாவது, தமிழ் இலக்கியம் என்ற ஒற்றைப்போக்கும், அதன் பொதுத்தன்மை என்பதும் கேள்விக்குள்ளாகி, பலவகையான போக்குகளைக்கொண்ட இலக்கியங்கள் தமிழில் உண்டு என்றும், பொதுப்போக்கு என்ற ஒன்றை இலக்கியத்தை முன்னிறுத்தி வரையறுப்பதை தவிர்க்கவுமான செயற்பாடுகள் மேலெழும்பின. ஆக, தமிழ் இலக்கியம் “பன்மையான” தன்மையை முன்னிறுத்த எத்தனித்தது என்றே சொல்ல வேண்டும்.

அடுத்து இலத்தீன் அமெரிக்க இலக்கியங்கள், தமிழ் மொழியை அதன் இலக்கியங்களை அதிகம் ஈர்த்தது. அதன் பிறகுதான் தமிழ் இலக்கியத்தின் புனைவு சார்ந்த திசை பெரும் மாற்றங்களை உருவாக்கின. நமக்கு தமிழ் எழுத்தாளர்களைவிட, போர்ஹே, கார்சியா மார்க்வெஸ் போன்றவர்கள் அதிகமாக தெரியவந்தார்கள்.

"எமது பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை இலக்கியமென்பது பரீட்சைக்கு தயார் செய்யும் ஒரு நடவடிக்கையாக மட்டுமே இருக்கின்றது."

சரி நிற்க, இலக்கியத்தை இப்படி பொதுப்படையாக தொகுத்துப்பார்க்கலாம், அமெரிக்க இலக்கியம் என்பது பாதுகாப்பான இலக்கியமாகும். பெருவாரியான மக்களின் பொதுமனநிலை எனக் கருதத்தக்க ஒன்றை, அதற்கு பாதிப்பு நேராத வகையில் இலக்கியப்பிரதிகளில் கொண்டுவருவது என்பதைத்தான் இப்படிச் சொன்னேன். அதேநேரம் குப்பைகளாக கருதிய இலக்கியப் பிரதிகளிலிருந்து உத்திகளையும், அதன் மையப்பொருட்களையும் எடுத்து, இந்த பொதுப்போக்கான பாதுகாப்பு இலக்கியத்திற்கு எதிரான குரல்களும் அங்குண்டுதான்.
ஐரோப்பிய இலக்கியத்தின் பொதுப்போக்கு, “சாய்மனை இலக்கியம்” அதாவது, ஓய்வு நேரத்தை கழிப்பதற்காக உற்பத்தி செய்யப்படுபவையாக கருதப்படும் எழுத்துக்கள். இதற்கு மாற்றமான, ஐரிஸ் எழுத்துக்கள், மற்றும் கீழ்மையின் அழகியல் போன்வைகளும் அங்கு உண்டு.
ஆசிய இலக்கியத்தை – ஒப்பாரிகளும், அழுகைகளும் எனலாம். இது பொதுப்போக்காக இருந்தாலும், அரேபிய இலக்கியங்கள், எதிர்க்குரல்களாகவும், கலகக்குரல்களாகவும் இருக்கின்றன.
ஆபிரிக்க இலக்கியம் ‘அனுமான யாதார்த்தவாதம்” எனலாம். அனேகமாக யதார்த்தம் என்பதை அனுமானிப்பதாக அவர்களின் எழுத்துக்கள் இருக்கின்றன. எனினும், சிறுகதையாடலை தனக்கான இலக்கியமொன்றை “கருப்பு இலக்கியம்” என்றவகையில் முன்வைப்பது முக்கியமானது. அதனூடாக ஒரு கதையாடலை விவாதிப்பதுதான். விளிம்புநிலையில் இருத்தப்பட்டதாக உணரும் சனக்கூட்டம் தனது இருப்பினை கவனத்திற்கொண்டு ஒரு அரசியல் செயற்பாடாக அந்த இலக்கியத்தை கட்டமைக்கின்றனர்.
இப்படி பன்மையான இலக்கியப்போக்குகளை உலகளவில் நாம் சந்திக்க முடியும். அதுபோலதான், தமிழ் இலக்கியமும் இந்தப்போக்குள் அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறது. அதேநேரம் தனக்கான தனித்த ஒரு அடையாளத்தையும் கொண்டிருக்கிறது. தமிழ் இலக்கியம் தனது வரலாற்றுரீதியிலான தனித்தன்மைகளை பேணிக்கொண்டு , உலகளவில் இருக்கின்ற இலக்கியப்போக்குகளையும் கவனித்து தனக்கான பாதையை அமைக்கிறது என்பதுதான் உண்மை.

த கட்டுமரன் : தமிழ் இலக்கியப் புலத்தில் இன்றும் கடந்தகால ஈழ விடுதலைப் போராட்டம் பற்றியதான எழுத்துக்களைத்தான் பெருமளவு வாசிக்க முடிகிறது. இது பல்லின சமூகங்களுக்கு மத்தியில் ஆரோக்கியமான விளைவுகளைத் தருமா? இது தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன?.
றியாஸ் குரானா: நீங்கள் கேட்க நினைப்பதை புரிந்துகொள்கிறேன். இந்தக் கேள்வியை இப்படியாக பார்க்கலாமா? போராட்டத்தை மையப்படுத்தியதாகவே இன்னும் ஈழத்து இலக்கியத்தின் பெரும் பகுதிகள் இருக்கின்றன. அது ஏன்? என்பதை நீங்கள் கேட்க விரும்பியதாக இருந்தால், அதற்கானதே இந்தப் பதில். கடந்த அரை நுர்ற்றாண்டுக்கு மேலாக போரையும், அதன் அரசியலையும்    மையப்படுத்தியதாகவே    ஈழத்து இலக்கியம் இருக்கும்படி இங்கு இலக்கியவாதிகளாக இருந்தவர்கள் பாதுகாத்துவந்திருக்கிறார்கள். அதையே பொதுப்போக்காக மாற்றிவிட்டிருக்கிறார்கள். வாழ்க்கை என்பது போரும் அதன் அரசியல் செயற்பாடுகளையும் மாத்திரம் கொண்டதல்ல. அதற்கு அப்பாலும் வாழ்வின் பெரும்பகுதி இருக்கிறது என்பதுதான் உண்மை.
இங்கு இனமுரண்பாடுகளையும், விடுதலைக்கான போராட்டம் என்ற ஒரு விசயத்தையும் கையாண்ட நிறுவனங்கள் மற்றும் ஆயுத அமைப்புகள், தங்கள் தேவைக்கு ஏதுவாக, ஈழத்துச் சூழலை மாற்றியமைக்கவும், அதனூடாக, வாழ்க்கை என்றால் போராட்டத்தோடு தொடர்புடையது மாத்திரமே என்ற கதைகளைக்கட்டி பொதுமக்கள் மத்தியில் பரப்பியிருக்கிறது. அதை நம்பவைத்திருக்கிறது. ஆக, அவர்களின் நோக்கத்திற்காக இலக்கியத்தையும் பயன்படுத்தியது என்பதுதான் உண்மையே தவிர வேறு எதுவுமே இல்லை.
நமது தமிழ் இலக்கிய மரபும் ஏதோ ஒருவகையில், இதை அனுசரித்துப்போகக்கூடியதுதான். ஏனெனில், அரசர்களுக்கும், வசதிபடைத்தவர்களுக்கும் பாட்டுப்பாடி, அவர்களிடமிருந்து சன்மானங்களை பெற்று வாழ்வதே சிறப்பானது எனக்கருதிவந்தவர்கள்தானே. அதிகாரத்திற்கெதிரான குரலாக, அரசுக்கு எதிரான குரலாக செயற்பட்டதே இல்லை என்பதுதான் முக்கியமான ஒன்று.
ஈழத்தை பொறுத்தமட்டில், இலங்கை அரசுக்கு எதிரானதாக கருதி முதன்மைப்படுத்தப்பட்ட ஈழத்து இலக்கியம் என்பது, தமிழ் மொழிச்சமூகங்கள் மத்தியில் உருப்பெற்றிருந்த அதிகார அமைப்புக்களுக்கு சாய்வாகவும், அவர்களை மகிழ்விப்பதுமாகவே இருந்தது என்பதையும் எப்படி மறக்க முடியும். அந்த அதிகாரங்களுக்கு எதிராக செயற்பட்ட அதிக எழுத்தாளர்களும் கவிஞர்களும் மக்களுக்கான விடுதலையை பெற்றுத்தருவதாக சொல்லிக்கொண்டு போராடிய ஆயுத அமைப்புக்ளாலேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதை இங்கு நினைவுகூர விரும்புகிறேன். அதற்கு எதிரான குரல்களும் ஈழத்து இலக்கிய வெளியில் உருப்பெறாமலில்லை. ஆனால், அப்படி உருப்பெற்ற இலக்கியக்குரல்களை “துரோகிகள்” என அடையாளப்படுத்தி எதிர்கொண்டதை நான் புதிதாகச் சொல்லத்தேவையுமில்லை.
விளிம்புநிலைச் சமூகங்களை அக்கறைகொள்வதைத்தான் நான் பரிந்துரைப்பேன். இந்த விளிம்புநிலைக் கதையாடல் என்பது சரியாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். தான் சார்ந்த இனத்தின் சமூகத்தின் பக்கம் மட்டும் நின்று நாங்கள் விளிநிலையில் வைக்கப்பட்டிருக்கிறோம், எங்களுக்கான உரிமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மாத்திரமே செயற்படுவதை நான் இந்த அர்த்தத்தில் பார்க்கவில்லை. அதை மிகவும் பின்தங்கியது. அது மோசமான ஒன்று.
விளிம்புக்குத் தள்ளப்பட்டிருக்கும் அனைத்து சமூகங்களையும், அச்சமூகங்களுக்குள்ளிருக்கும் நுண்ணளவிலான விளிம்புகள் பற்றியும் அக்கறைகொள்வதையே பரிந்துரைக்கிறென். அப்படி கவனிப்பதுதான், விளிம்புநிலைக் கதையாடல் என்பதாகும். அதுவே பன்மைத்தன்மை எனச் சொல்லும் இந்த விசயத்தை நெருங்கிவரக்கூடிய ஒன்று சரியா?
ஈழத்தைப் பொறுத்தமட்டில் இங்கிருக்கின்ற பொதுப்போக்காக இருக்கின்ற அனைத்து அம்சங்களும், இனவாதம், மற்றும், மொழிவாதம் சார்ந்தது மட்டுமே. அதற்கப்பால் இவர்கள் கடந்து செல்வதற்கு இன்னும் தயாராக இருப்பதாக தெரியவில்லை. அப்படி கடந்துசெல்வதற்கான உரையாடல்களும், புரிந்துகொள்ளுதலும் இல்லாதவரை பன்மைத்தன்மை என்பதற்கு இங்கு எந்தவகையான முக்கியத்துவமும், பெறுமானங்களும் இல்லை.
தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், தலித்துகள், பெண்கள் என அனைத்து தரப்பையும் அக்கறைகொள்ளுவதும், அவர்களுக்கான அரசியல், இலக்கிய தனித்துவங்களை கருத்திற்கொள்வதையும்தான் நான் மேலே பேச முற்பட்டிருக்கிறேன்.

த கட்டுமரன் : பன்மைத்துவ சமூகங்களுக்குள் இலக்கியமானது சமரசத்தை எப்படி வளர்க அல்லது நிலைக்கச் செய்யும் என கருதுகின்றீர்கள்?
றியாஸ் குரானா: நிச்சயமாக சமூகங்களுக்கிடையில் இலக்கியம் சமரசத்தை வளர்க்காது. உண்மையில் இலக்கியத்தின் வேலை அதுதானா? அதாவது இனங்களுக்கிடையில் சமரசத்தை வளர்ப்பதுதானா இலக்கியத்தின் பணி? இது ஒரு சிக்கலான கேள்வி. ஆனால், இலக்கியத்திற்கு இப்படி சமரசத்தை உருவாக்கும் ஆற்றல் இருக்கிறது என சிறுபிள்ளைத்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது பிற்போக்கான நம்பிக்கை மாத்திரமே.

த கட்டுமரன் : அப்படி என்றால் இலக்கியத்தின் பணி என்னவாக இருக்கும்என நினைக்கின்றீர்கள்?
றியாஸ் குரானா: சமரசத்தை வளர்க்காது என நான் கூறுவதற்கு பல காரணங்கள் உண்டு. இலக்கியத்தை முன்வைத்துத்தான் இந்தக் கூற்றை சொல்ல வேண்டி வந்தது. சமரசத்தை உருவாக்க வேண்டும் என நினைப்பது ஏனெனில், சமூகங்களிடையே தற்போது சமரசம் இல்லை என்பதால்தான். அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். அதே நேரம் இலக்கியத்திற்கென்று தனியானதும், அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்கதுமான ஒற்றையான பணி ஏதும் இல்லை என்பது இன்னுமொரு முக்கியமான விசயம். எனினும், தமிழ் இலக்கியத்தைப் பொறுத்த மட்டில், ஒரு விசயத்தை சுட்டிக்காட்ட வேண்டும் என நினைக்கிறேன். (தமிழ் இலக்கியம் என்பதைவிடவும் பொதுவாக இலக்கியம் எனவும் எடுத்துக்கொள்ளலாம்)
அதிகமும் இங்கு பின்பற்றப்படும் இலக்கியம் சாரந்த பார்வை என்பது, யதார்த்தத்தை பிரதிபலித்தல் என்பதுதான். யதார்த்தத்தை பிரதிபலிக்க முடியுமா? என்ற கருத்தியல் ரீதியிலான அலசலுக்குள் நுழையாமல், வேறு திசையில் இதை விவரிக்க விரும்புகிறேன்.

"சிங்கள மொழிச்சமூகம் எப்படியும் அதிகாரத்தரப்பாக இருப்பதால் அவர்கள்தான் தங்களுடைய நிலைப்பாட்டில் மாற்றங்களையும் நெகிழ்ச்சிகளையும் கொண்டுவர வேண்டும்."

சூழல் என்பது சமூகங்களிடையே சமரசமற்று அல்லது நல்லிணக்கமற்று இருக்கிறது என கருதுவதால்தான், அதை செய்வதற்கு முயல வேண்டிய தேவை இருக்கிறது என எடுத்துக்கொண்டால், அதுதானே இங்கு யதார்த்தமாக இருக்கும். ஆகவே, இலக்கியம் சூழலை பிரதிபலிக்கும் என நம்பினால், இங்கு உருவாகும் இலக்கியங்களும், நல்லிணக்கமற்ற அல்லது சமரசமற்ற சூழலைத்தானே பிரதிபலிக்க முடியும். அப்படி எனில், இந்த இலக்கியங்கள் எப்படி நல்லிணக்கத்திற்கும், சமரசத்திற்கும் உதவ முடியும்?
இதைவிடவும் முக்கியமான சில விசயங்களை இங்கு தடங்காட்ட விரும்புகிறேன். அனைத்து அறிவியல் மற்றும் நீதி, அரசியல் கருத்தாக்கங்கள் போன்ற மக்களை, சமூகங்களை சமரசத்திற்கும், நல்லிணக்கத்திற்கும் இணங்கச் செய்வதற்குத்தானே இதுவரை முயன்றிருக்கின்றன. அப்படி அறிவித்துக்கொண்டுதானே உலகெங்கும் செயல்படுகின்றன. அவைகளால் ஏன் இதுவரை முடியாதுபோயிருக்கிறது? இவை போலதான், வரலாற்றில் இலக்கியமும் பெரும் அக்கறைகொண்டு செயல்பட்டு வந்திருக்கிறது.

த கட்டுமரன் : அப்படியாயின் பன்மைத்துவ சமூகங்களுக்கிடையில் சமரசத்தை ஏற்படுத்த எப்படியான வழிகளைக் கையாள முடியும் 
நினைக்கிறீர்கள்?
தனது வயிற்றுக்காக அதிக நேரத்தை செலவிட்டு உழைக்கும் பெருவாரியான மக்கள் கூட்டம், இங்கு இலக்கியம் என எழுதப்படும் பிரதிகளோடு உறவு வைத்துக்கொள்வதே இல்லை. அவர்களுக்கு நேரம்கூட இருப்பதில்லை. ஆகவே, சமரசம் என்பதோ, நல்லிணக்கம் என்பதோ எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதை தடங்காட்டியிருக்கிறேன். அதற்கான பிரத்தியேகமான வழிமுறைகளை என்னால் பரிந்துரைக்க முடியாது. உலகளவில் எவ்வளவோ பெரும் கருத்தியல்கள் எல்லாம் தோற்றுப்போயிருக்கும் ஒரு இடம்தான் இந்த சமரசம் மற்றும் நல்லிணக்கம் போன்ற விசயம். ஆனால், தற்காலிகமான, குறித்த தேவைக்கான நல்லிணக்கத்தையோ, சமரசத்தையோதான் உருவாக்க முடியும்.
இலக்கியம் என்பது நிலவுகிற சூழலை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், ஒரு புதிய சூழலையும் பிறப்பிக்கக்கூடியது. இரண்டுவகையான செயற்பாடுகளை செய்யும் பிரதிகளையும் இலக்கியம் என்றுதான் அழைக்கிறோம். ஆனால், முடிந்தளவு வன்முறை குறைந்த, நிலவுகிற சூழலை விமர்சிப்பதினூடாக ஒரு விழிப்புணர்வை உருவாக்குகின்ற இலக்கியப் பிரதிகளை இந்த தற்காலிகமான வேலையை செய்வதற்கு ஓரளவு பரிந்துரைக்கலாம். ஆனால், சூழலை தொந்தரவு செய்யக்கூடிய இலக்கியப் பிரதிகளை எழுதும் துணிச்சலான இலக்கியச் செயற்பாட்டாளர்கள் இங்கு இருக்கிறார்களா என்ன? இல்லையே.. அதனால்தான் தெளிவாகச் சொல்கிறேன். சமரசம் என்பதற்கு அப்பால், ஒவ்வொரு சமூகமும் தனது கலாச்சாரத்தையும், செயற்பாடுகளையும் கொண்டாடும் பிரதிகளை மட்டுமே உற்பத்தி செய்கின்றன. செய்துமிருக்கின்றன. எட்வேர்ட் செய்யட் சொல்வதைப்போல, தனது கலாச்சாரத்தின் பெருமைகளை பேசி ஆரவாரஞ் செய்வதும், தனது கலாச்சாரம் செய்யும் தவறுகளை மறைப்பதும், பிற சமூகங்கள் அதே தவறுகளை தமது சமூகத்தை நோக்கி செய்யும் போது மூர்க்கமாக எதிர்ப்பது மட்டுமே புத்திஜீவியின் நேர்மையான செயலாக இருக்க முடியாது. 

இதையே , நானும் பரிந்துரைக்க விரும்புகிறேன். மற்றைமையை ழவாநசள   தம்மிலும் கீழானவர்கள் என நோக்குதற்கு பதிலாக, வித்தியாசமானவர்கள். அப்படி இருக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு என ஏற்றுக்கொள்ளும் புரிதல்களை உருவாக்கும் உரையாடல்கள் மிக அவசியமானவை. 

No comments:

Post a Comment