Friday 7 April 2017

"இளைஞர்கள் பற்பல விடயங்களில் அடிப்படையே தெரியாமல் கருத்து சொல்லவும், ஒரு செய்தியை வெளியிட துணிவதும் கொடுங் குற்றமாகும்."


முர்சித்_முகம்மது

அரசியல்வாதிகள் இன நல்லிணக்கம் தொடர்பில் இனிக்க இனிக்க பேசினாலும், உள்ளுர் தேர்தல் அரசியலை மையப்படுத்தி இனவாதத்தை பரப்புபவர்களாகவும், மக்களுக்கிடையே ஒரு சேய்மைநிலையை தொடர்ந்தும் வைத்திருக்கவுமே விரும்புகின்றனர்.
“வேகமும், விவேகமும், துணிச்சலும், மாற்றத்தை நேசித்தலும், புரட்சியில் பங்கேற்றலும் பருவங்களுக்கு அப்பாற்பட்டது.” என்கிறார் இளம் ஊடகவியலாளர் முகமட்முஸாறப் (வயது33) .

இலங்கையின் தமிழ்த் தொலைக்காட்சித்துறையில் தனித்துவமான கருப்பொருட்களைக் கொண்ட இரசவாதம், ஆட்டேகிராப், பள்ளிக்கூடம், அதிர்வு , வாங்க பழகலாம் போன்ற நிகழ்ச்சித் தயாரிப்பிலும் தொகுப்பிலும் குறுகிய காலத்திற்குள்ளே பரந்துபட்ட பரப்பினுள் ரசனையையும் சிந்தனையையும் தூண்டியுள்ளார்.மாற்றுக் கருத்துக்களையும் புதிய சிந்தனைகளையும் வரவேற்று உரையாடும் இவர், கட்டுமரத்திற்காக எம்.ஐ.சி.ரீ யின் கட்டுமரம் செயற்திட்டத்திற்கான இலங்கையின் கிழக்குப்பிராந்திய ஊடகவியலாளர் முர்சித் முஹம்மதோடு "நல்லிணக்க சூழலில் ஊடகங்களும் இளைஞர்களும்" பற்றி தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.
கட்டுமரம்: சமகால இலங்கை அரசியல் மற்றும் மாற்றத்திற்கான சூழலில் இளைஞர்களின் நிலைப்பாடுகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் உங்களது அவதானிப்புகள் எவ்வாறுள்ளது?
முஸாறப் : இளைஞர்கள் வேகமாக இயங்கக்கூடியவர்கள், போராட்ட குணம் படைத்தவர்கள் என்ற பொதுச்சமன்பாட்டுக்கப்பால் வேகமும், விவேகமும், துணிச்சலும், மாற்றத்தை நேசித்தலும், புரட்சியில் பங்கேற்றலும் பருவங்களுக்கு அப்பாற்பட்டது என்பது எனது நம்பிக்கை. இலங்கையில் ஜனவரி 8 இன் அரசியல் மற்றத்திற்கு வித்திட்ட மாதுளுவாவ சோபித தேரரை( வயது 73) எப்படிப்ப பார்ப்பது? ஆவ்வளவு வேகம் விவேகம். 41 சிவில் சமூகங்களை ஒன்றிணைத்து அவர் செயற்பட்ட வேகம் இளைஞர்களுக்கு ஒப்பானது.
அதே நேரம், காதலுக்காக ரயிலில் தலையை துண்டித்து தற்கொலை செய்த இளைஞனை என்னவென்று சொல்வது? ஆக எல்லாப் பருவத்திலும் எல்லா வகையானவர்கள் இருக்கிறார்கள். தொன்று தொட்டு மாற்றத்தை உண்டு பண்ண வேண்டி போராடிய இளைஞர் சமூகத்தை கண்டு வருகிறோம். சிறு பத்திரிகை அச்சிட்டு, வீடு வீடாய் விநியோகித்து, டீக்கடையெங்கும் கூட்டம் நடாத்தி அன்றைய இளைஞர்கள் போராட்டம் நடாத்தினார்கள். இன்றைய இளைஞர்களுக்கு சமூக வலைத்தளங்கள் எனும் சாதனம் கையில் கிடைத்திருக்கிறது.

மக்களை விழிப்படையச் செய்யவும், ஓரணியில் அனைவரையும் ஒன்று திரள வைக்கவும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. அதனைக் கொண்டு இன்று பல இளைஞர்கள் சமூகத் தொண்டாற்றவும், மாற்றத்தை உண்டுபண்ணவும் முன்வருவது ஆரோக்கியமானது. இதே நேரம் கைப்பேசியையே நோண்டியபடி தலை குனிந்து நிற்கவும், ஒரு சமூகப் புரட்சியில் ஈடுபடும் இளைஞர் கூட்டத்தை அதே சமூக வலைத்தளத்தில் நக்கலடித்து, குற்றம் சுமத்தவும், வாழ்க போராட்டம் என கொமென்ட் அடித்துவிட்டு வீட்டில் குப்புற படுக்கவும் ஒரு இளைஞர் கூட்டம் தயாராக இருப்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. ஆதலால் காலம், வயது, பால், இனம் என்ற பேதங்களுக்கப்பால் இலங்கை அரசியலில் பாடுபடும் ஒரு கூட்டம் இன்றைய நவீன உலகின் வரவுகளை வரங்களாய்ப் பயன்படுத்தி வெற்றி வாகை சூடுவது மகிழ்ச்சி.
கட்டுமரம் : இன்றைய அரசியல் மற்றும் ஊடகச் சூழலில் கருத்துச் சுதந்திரம், தகவலறியும் உரிமைச்சட்டம் போன்றவற்றை இளைஞர்கள் தாக்கம் மிக்கதாக பயன்படுத்துகிறார்களா?
முஸாரப் : ‘நீ கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் நீ அதைக் கூறுவதற்கான உனது உரிமையை எனது உயிரைக் கொடுத்தும் காப்பேன்.’ என வால்டேயர் கூறியதற்கிணங்க இன்றைய இளைஞர்கள் இருக்க வேண்டியது அவசியமாகிறது. கருத்துகளுக்கிடையிலான மோதுகை என்பது தனிநபர்களுக்கிடையிலான மோதுகையாக மாற்றம் பெறுவது அநாகரிகமானது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஆனால் தனக்குத் தோன்றியதை வெளிப்படுத்தும் தைரியமும், துணிச்சலும் இன்று வளர்ந்திருப்பதாகவே தோன்றுகிறது. அதேவேளை தெரிந்த விடயத்தை பிறருக்குச் சொல்லி மாற்றத்தை உண்டு பண்ணுவதில் காட்டுகின்ற அக்கறையைப் போலவே தெரியாத விடயங்கள் தொடர்பில் கருத்துச் சொல்லாது மௌனியாக இருப்பது சிறந்தது.
கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், இன்று பற்பல விடயங்களில் அடிப்படையே தெரியாமல் பல இளைஞர்கள் கருத்து சொல்லவும், ஒரு செய்தியை வெளியிட துணிவதும் சமூக மட்டத்தில் ஒரு உண்மை பொய்யாகவும், பொய் உண்மையாகவும் வெளிப்பட காரணமாகிறது. இத்தகைய செயல் ஒரு கொடுங் குற்றமாகும். தவிரவும் அரசியல்வாதிகளின் சில்லறைகளுக்கு விலை போய் தன் சுயத்தை இழந்து குறித்த அரசியல்வாதிக்கு ஆதரவாகவும், ஏனைய அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் எழுதத் துணிந்த இளைஞர் கூட்டங்களால் பாமர மக்களிடையே பெருங் குழப்பம் ஏற்பட்டு மாற்றத்திற்கான வழித்தடங்கள் தேய்ந்து போகும் அபாயகரமான ஒரு சூழல் தோன்றியிருப்பதும் ஆபத்தானது.
தகவல் அறியும் உரிமைச்சட்டம் என்பது பெறுமதியான பரிசாகும். அதன் பயன்பாடுகள் குறித்து இப்போதுதான் மக்களிடையே புரிதல் ஏற்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் புரட்சிகர இளைஞர்களினால் இது துணிகரமாக கையாளப்படும் என்பது எனது நம்பிக்கை.

கட்டுமரம்: ஊடக நிறுவனங்களின் பல்வேறுபட்ட கொள்கைகள் மற்றும் பின்புலங்களுக்கு மத்தியில் ஊடகவியலாளர்களால் குறிப்பாக இளையவர்களால் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் ஊடகத்தொழிலில் ஈடுபட முடிகிறதா? ஊங்கள் அபிப்பிராயம் என்ன?
முஷறப்: ஒரு சம்பவத்தை சொல்கின்றேன். நான் தொலைக்காட்சித் துறையில் அறிமுகமான புதிதில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது ‘ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்’ என்ற பழமொழியின் உண்மை விளக்கத்திற்கும், மக்களிடையேயான புரிதலுக்குமிடையிலான வித்தியாசத்தையும் எடுத்துக் கூறினேன். நிகழ்ச்சி நிறைவடைந்த பின் எமது பணிப்பாளர் வந்து, ‘இது வெற்றிலை ஆட்சி. ஆனையைப் பற்றி பேசினீர்கள் அது எனக்குத்தான் பிரச்சினையைத் தரும் அப்படியானவற்றை தவிர்த்துவிடுங்கள்’ என்றார். இப்படி இருக்கிறது நிலைமை. சொற்பிரயோகங்கள் கூட தடைசெய்யப்பட்ட நிலை. இன்று, ஊடக சுதந்திரம் ஓரளவுக்கு இருப்பதாக கூற முடிந்தாலும். அது சிறந்த ஊடகத்தொழிலைப் புரிவதற்கான சூழ்நிலையாகக் கொள்ள முடியாது. இன்றைய ஆட்சி கடந்த ஆட்சியை விட சில விடயங்களில் சிறந்ததாக, சுதந்திரமானதாக இருப்பினும் ‘நல்லாட்சி’ என்ற வார்த்தை இவ்வாட்சிக்கு பொருத்தமில்லாத கனமான ஒரு வார்த்தை என்பதைப் போலவே, இன்று ஊடக சுதந்திரம் இருப்பதாக தோன்றினாலும், அது வினைத்திறனான ஊடகப்பணியாற்றுமளவிற்கான விரிந்ததொன்றல்ல. இதுதான் யதார்த்தம். மேலும் சொல்லப் போனால் இன்றைய தமிழ் மொழி மூலமான ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களில் பலரும் மிகக் குறுகிய வட்டத்திற்குள் தமது அறிவையும், அனுபவத்தையும் சுருக்கிக் கொண்டுள்ளார்கள் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. இது எனது அனுபவத்தில் கண்டது.
கட்டுமரம்: இலங்கையின் பன்மைத்துவ சூழலில் நல்லிணக்க செயற்பாடுகள் எந்த மட்டத்திலுள்ளது?
முஸறப் : இன்றைய ஆட்சியிலே நல்லிணக்கத்தை உருவாக்கும் பொருட்டு தமக்குள் தெளியவும், மக்களைத் தெளிவுபடுத்தவும், இனங்களுக்கிடையே பரஸ்பரம் நம்பிக்கையை உருவாக்கவுமென ‘கலந்துரையாடல் அமைச்சு’ உருவாக்கப்பட்டது. அது உருவாக்கப்பட்ட போது Ministry of Dialogue என குறிப்பிடுவதற்கு பதிலாக Ministry of Dialog என தொலைத்தொடர்பாடல் சேவையின் பெயர் அரச மட்டத்திலேயே குறிப்பிடப்பட்டது. அந்தளவு தூரம் மிகுந்த தொலைவிலே நாம் எல்லோரும் இருந்தோம். ஆனால் இன்று ஆரோக்கியமான சில வேலைத்திட்டங்கள் குறித்த அமைச்சினாலும் பல சிவில் அமைப்புகளாலும் முன்னெடக்கப்படுகிறது. அரசியல்வாதிகள் இன நல்லிணக்கம் தொடர்பில் இனிக்க இனிக்க பேசினாலும், உள்ளுர் தேர்தல் அரசியலை மையப்படுத்தி இனவாதத்தை பரப்புபவர்களாகவும், மக்களுக்கிடையே ஒரு சேய்மைநிலையை தொடர்ந்தும் வைத்திருக்கவுமே விரும்புகின்றனர்.
கட்டுமரம் : இந்த இடத்தில் ஊடகவியலாளர்களின் பங்காற்றல் பற்றி உங்கள் கருத்து என்ன?
இத்தகைய சூழலில் ஊடகங்களுக்கு பாரிய பொறுப்புண்டு. பரபரப்புக்காகவும், வர்த்தகத்துக்காகவும் இனவாதத்திற்கு தூபமிட்டு வரவேற்பவர்களாக ஊடகவியலாளர்கள் பணிபுரியாமல் , எரியும் இனவாத தீயை அழிப்பதை ஒரு தார்மீகக் கடமையாக எண்ணி செயற்படுதல் அவசியமாகின்றது. சமகாலத்தில் முதல் கட்டமாக தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து தமிழ் பேசும் மக்களிடையே நல்லிணக்கத்தை உண்டு பண்ண வேண்டும். பின்னர். சிங்கள் மொழி பேசும் ஊடகவியலாளர்களையும் இணைத்துக் கொண்டு சகல இனங்களுக்கிடையேயும் பரஸ்பரம் ஒற்றுமையை வளர்க்க முயற்சிக்க வேண்டும். இவற்றை பேச்சளவிலல்லாமல் இதய சுத்தியோடு செயற்படுத்துவது தொடர்பாக ஒரு சில ஊடகவியலாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் நான் ஈடுபட்டு வருகிறேன். வெகு விரைவில் அதனை நாம் வெளியரங்கத்திற்கு கொண்டு வருவோம். நிச்சயம் மாற்றம் வரும் என உறுதியாக நம்புகிறோம்.

No comments:

Post a Comment