Tuesday, 1 September 2015

பேரா. மௌனகுரு ஐயா ஒரு வித்தியாசக்காரர்.-காண்டவதகனம் கூத்து, பரதம் தழுவிய நாடகம்




          பேரா. மௌனகுரு ஐயா அவர்களின் முயற்சியினால் 2009 இல் நிறுவப்பட்ட அரங்க ஆய்வுகூடமானது புதிய சிந்தனைகள் ஊடாக இளம் தலைமுறையினருக்கு கலைசார் படைப்பாற்றல் பயிற்சிகளை அளித்து வருகின்றது.


    அரங்க ஆற்றுகையில் புதிய, புதிய பயிற்சிகளை மேற்கொள்ள, சுதந்திரமான ஒரு மனவெளியையும் படைப்பின் திறன்களையும் அளிப்பதே ஆய்வுகூடத்தின் நோக்கமாகக்  கூறப்படுகிறது. பல விதமான பயிற்சிப்பட்டறைகளை வாரம்தோறும் நடாத்தி வருகின்ற அரங்க ஆய்வுகூடமானது இதுவரை 15க்கும் மேற்பட்ட பரிசோதனை ஆற்றுகைகளை நிகழ்த்தியிருக்கின்றதாம்.





      அந்தவகையில் கடந்த 22-23.08.2015 (சனி,ஞாயிறு) தினங்களில் சத்துருக்கொண்டானின் சர்வோதய மண்டபத்தில் நடைபெற்ற 45வது இலக்கியச்சந்திப்பில் பேரா. மௌனகுரு ஐயாவின் நெறியாள்கையில் 'காண்டவதகனம்'-கூத்து, பரதம் தழுவிய நிருத்திய நாடகம் ஆற்றப்பட்டது.
'காடழிப்பினால் அன்று பாரதப்போர் - காடழிப்பினால் இன்று உலகப்போர்' எனும் தொனிப்பொருளில் அமைந்த கூத்து நாடகமானது பேரா.மௌனகுருவை ஒரு கூத்துக்கலை விஞ்ஞானி என்றே சொல்லத்தூண்டியது.

        குறிப்பாக பிரதான பாடகியான சுகிர்தா வின் குரலும், பாடும் தன்மையும் மெய் சிலிக்க வைத்ததுடன் மேடையில் சசிகரன், பிரதாணி, சகிதா, ஞானசேகரன், ஜெனி, தினேஸ், நிகாந்தினி மற்றும் கேதீஸ்வரன் ஆகியோரின் நிகழ்த்துகைகள் முடியும்வரை இமைகளை மூடவிடாமல் மனதை ஆட்கொண்டது.

துணைப்பாடகர்களான கிருஸ்ணவேணி, லாவண்யா, லோகதர்சினி மற்றும் ஜனனி அகியோரது பங்கு காற்றை சந்தமாக்கி வெளியை அர்த்தம் செய்தது. சரஸ்வதி அம்மாவின் வயலினும், யூட் நிராசனின் ஆர்மோனியமும இன்னும் இன்னும் பார்வையாளர்களது காதுகளில் இனிமை பாய்ச்சிக் கொண்டிருந்தது. மோகனதாசனின் தபேலா, மத்தளமும் மட்டுமல்லாமல் அவரின் குரலும் அரங்கை இன்னுமொரு தளத்திற்கு இட்டுச்சென்றது.


             இத்தனையையும் நெறிப்படுத்தியது மட்டுமல்லாமல் உடுக்கை மற்றும் தாளங்களோடு வாத்தியக் கலைஞர்களோடு அமர்ந்து சிறப்பித்தமை பேரா. மௌனகுரு ஐயா ஒரு வித்தியாசக்காரர் என்பதை மேன்மேலும் உறுதி செய்து கொண்டிருந்தது.

அழிந்து வரும் கூத்துக்கலைகள் மீதான ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் மற்றும் தேடலையும் எப்படி இளையோர் மத்தியில் விதைப்பது என்பதை பேரா. மௌனகுரு ஐயா அவர்கள் நன்கு உணர்ந்து செயற்படுவது குறிப்பித்தக்கது. இது போன்ற காத்திரமான பணிகள் மட்டக்களப்புடன் மட்டும் மட்டுப்படுத்திவிடாமல், மட்டக்களப்பிமை மையப்படுத்தியதாக முழுத்தீவலாவிய ரிதியில் கொண்டுசெல்லும் ஆற்றல் பேரா. மௌனகுரு ஐயா அவர்களுக்கு இருப்பதை உணர முடிகிறது. இப்பணி மேலும் விரிவாக்கம் பெற அவரது மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து கலை, இலக்கிய செயற்காட்டாளர்கள், ஆர்வலர்கள், மற்றும் சமூக சிந்தனையாளர்கள் துணைநிற்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் ஏதுமில்லை.


.
.







No comments:

Post a Comment