Saturday, 24 February 2024

இக்கரைக்கு அக்கரைப் பச்சை..

இன்றைய தமிழ் எழுத்துச் சூழலில், வேறு நாடுகளில் உருவான எழுத்துக்கள், இலக்கியங்கள் மற்றும் கோட்பாடுகளை கொண்டாடும் போக்கு அதிகமாகக் காணப்படுகிறது. இதன் மூலம் தங்களுடைய மொழியையும் எழுத்து முயற்சிகளையும் மாற்றி அமைக்கும் எழுத்தாளர்கள் பெருமளவில் கவனிக்கப்படுகின்றனர்.

ஆனால், நமது மண்ணின், நமது சமூகத்தின் மொழியும் இலக்கிய வடிவங்களும் எழுத்துப் பாரம்பரியமும் தனித்துவம் வாய்ந்தவை. இவற்றுள், நமது நாட்டார் இலக்கிய வடிவங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

மற்ற தேசங்களின் நாகரீகங்களின் எழுத்துப் பாரம்பரியத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் சிறிதளவேனும் நமது மண்ணையும் மக்களையும் பண்பாட்டையும் மற்றும் பாரம்பரியத்தையும் பேசும் கலை இலக்கிய வடிவங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். 

 அப்போதுதான் நமது  முன்னோர்கள் விட்டுச்சென்ற பெருமானங்களை  நமது சுயத்தின் அடையாளங்களாக எழுத்து மற்றும் இலக்கிய வடிவில் எதிர்கால சமூகத்திற்கு விட்டுச்செல்ல முடியும்.

#முர்ஷித்

Friday, 23 February 2024

மடையன் மாதிரி...

அறிவீனர்களை சுட்டிக்காட்ட "மடையன்" எனும் வார்த்தை சமகாலத்தில் பொதுவாக அன்றாடம் நாம் பயன்படுத்துவதுண்டு. இவ்வார்த்தை வரலாற்று சிறப்பு மிக்கது.

பண்டைய காலத்தில், பெருவெள்ளம் ஏற்படும் போது, அணைகளில் நீர் நிரம்பி உடைப்பெடுப்பதற்கு முன், பேரழிவைத் தடுத்து மக்களையும் மக்களின் பொருளாதாரத்தையும் காக்கும் நோக்கில், பெருக்கெடுத்து வரும் அணைகளுக்குள் குதித்து சுழியோடி "மடை" எனும் மதகுகளை திறக்கும் தியாகத் தொழில் செய்பவனையே "மடையன்" என்பர்.

 இத்தொழில் செய்பவர்களில் பலர், வெள்ளத்தோடு வெள்ளமாக மக்களுக்காக தங்கள் உயிரையும் உடலையும் தியாகம் செய்வதும் உண்டு. இப்படியான கருத்தாழம் மிக்க வார்த்தை இப்போது ஏளனத்திற்குரிய வார்த்தையாக மாற்றப்பட்டிருக்கிறது.

#முர்ஷித்

வரலாறு முக்கியம் அமைச்சரே..

"வேர் இல்லாது மரம் நிலைக்காது" அதுபோலவே, வரலாறு இல்லாத அல்லது தமது வரலாற்றை அறியாத வாழ்க்கைக்கு சுவை இருக்காது.

நமது வரலாறு, நமது முன்னோர்களின் அனுபவங்களை, நமது பண்பாடு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை, நமது நாகரீகத்தை பற்றிய அறிவை வழங்குகிறது. அந்த அறிவு மூலம் நமது வாழ்க்கையை மேம்படுத்தலாம், அதனூடாக நமது சந்ததியினருக்கு சிறந்த பெருமானத்தை கையளிக்கூடியதாக இருக்கும்.

அரசியல் ரீதியாகவும் நமது இருப்பை  ஸ்திரப்படுத்திக்  கொள்வதற்கு நமது வரலாறு மிகவும் முக்கியமானதாகும்.  நமது தேசத்தினதும் சமூகத்தினதும் வரலாற்றை அறிந்து கொள்வதன் மூலம், நமக்கான உரிமைகளையும் நில புலம் உள்ளிட்ட உடமைகளையும் தக்கவைத்துக்கொள்ள முடியும்.  

துரதிர்ஷ்டவசமாக, 
நம்மை ஆளும் தலைவர்கள் மற்றும் பெரியவர்களில் பலருக்கு நமது வரலாறு பற்றி தெளிவில்லை. அவற்றை தேடவோ அறியவோ முயற்சிப்பது கூட இல்லை, இது பல்வேறு தவறுகளுக்கும், பிழையான முடிவுகளுக்கும் காரணமாக அமைகிறது. 

எனவே, நமது வரலாற்றை தேடி ஆராய்ந்து கற்றுக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக பார்க்கவேண்டும். நமது முன்னோர்களின் அனுபவங்களை கற்றுக்கொண்டு, நமது பண்பாடு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்பதன் மூலம், வரும் சந்ததிகளுக்கு சிறந்ததொரு நாகரீகத்தை மட்டுமல்லாது இஸ்திரமான இருப்பையும் விட்டுச் செல்ல முடியும் என நினைக்கிறேன்.

#முர்ஷித்