Saturday 14 October 2023

தென் கிழக்கின் கரையோர கிராமங்களை மேயும் கடல்; ஒழுவில் துறைமுகமும் அதன் விளைவுகளும்.

-முர்ஷித்

ஒலுவில் துறைமுகம்.

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒலுவில் துறைமுகமானது 2013ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. டென்மார்க் அரசின் 46.1 மில்லியன் யூரோ வட்டியில்லா கடனுடன் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 5 வருடகால கட்டுமான பணிகளைத் தொடர்ந்து துறைமுக வேலைப்பணிகள் 2013ல் நிறைவு பெற்றது.



 01.09.2013ம் திகதியன்று மாலை அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டது. இதன் ஆரம்ப கர்த்தா முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு வர்த்தக மற்றும் மீன்பிடி துறைமுகம் ஆகும். வர்த்தக துறைமுகம் 5,000 டிடன் தொகுதி கொண்ட சிறிய கப்பல்களுக்கும், மீன்பிடி துறைமுகம் 300 மீன்பிடி படகுகளுக்கும் சேவை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒலுவில் துறைமுகம் திறக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை அதன் பாதக-சாதக விளைவுகள் குறித்து சர்ச்சைகள் எழுந்த வண்ணமேயுள்ளன. 

சிலர், துறைமுகம் தென்கிழக்கு இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறார்கள், மற்றவர்கள் அது சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அஞ்சுகின்றனர்.

துறைமுகத்தின் பொருளாதார விளைவுகள்

ஒலுவில் துறைமுகத்தை  திறப்பதனூடாக, தென்கிழக்கு இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துறைமுகம் மூலம், இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டை ஈர்க்க முடியும், இது வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும். என நம்பப்படுகிறது.

துறைமுகத்தின் சுற்றுச்சூழல் விளைவுகள்

ஒலுவில் துறைமுகம் அமைந்துள்ள பகுதி ஒரு முக்கியமான பாரம்பரிய கடல் மீன்பிடி பகுதியாகும். துறைமுகம் அமைப்பதால், சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.  துறைமுகம் சாதாரண,  பாரம்பரிய மீனவர்களின்  வாழ்க்கையை பாதித்துள்ளது, மேலும் துறைமுகய்தின் வடக்கு நோக்கிய ஒலுவில், நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை, பாண்டிருப்பு மற்றும் மருதமுனை வரையிலான  கரையோர அயல் கிராமங்கள் கடலரிப்பால் காவு கொள்ளப்பட்டிருக்கிறது.

அதுபோல, ஒலுவில் துறைமுகமத்தின் தெற்கு பகுதியான பாலமுனை இருந்து பொத்துவில் வரையிலான  கரையோர கிராமங்களில் சில, கடல் அரிப்பிற்கும், சில மண் வார்ப்பிற்கும் உள்ளாகி அசாதாரண சூழல் நிலவுகிறது.

கடலரிப்பின் விளைவுகள்

கடலரிப்பின் விளைவுகளாக வீடுகள், விவசாய நிலங்கள், தென்னை மரங்கள், கட்டிடங்கள்,  வீதிகள் மட்டுமின்றி இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெருமதிவாய்ந்த கட்டிடங்கள் உள்ளிட்ட கரையோர வளங்கள் பல முற்றாக கடலால் அழித்தொழிக்கப்பட்டுள்ளன .

கரையோர மீனவ மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து  இடம்பெயர்ந்து ஏனைய பிரதேசங்களுக்கு சென்றுள்ளனர். சுற்றுச்சூழல் பெருமளவு மாசுபட்டு இயற்கையின் சமநிலை மாற்றமடைந்துள்ளது. கரையோர  இயற்கை மற்றும் உயிரியல் பல்வகைமை சீர்குழைத்த நிலையை அடைந்துள்ளது.

கடலரிப்பின் தீர்வுகள்

கடலரிப்பை தடுக்கவும், அதன் தாக்கத்தை குறைக்கவும் இல்லாமலாக்கவும்  துறைசார்ந்த வல்லுனர்களால்  தீர்வுகள் பரிந்துரைக்கப்படுகின்றன

அதில், கடலரிப்பு தடுப்பு சுவர்கள் மற்றும் பாறைகளை அமைத்தல், கடலரிப்பு தடுப்பு மரங்களை நட்டு பராமரித்தல், வடிகால் அமைப்புகளை மேம்படுத்துதல், கடல் மட்ட உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுத்தல் போன்றவை முக்கியமானவையாகும்.

கடலரிப்பை தடுக்க ஒலுவில் துறைமுகம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

ஒலுவில் துறைமுகம் கடலரிப்பை அதிகரிப்பதில் ஒரு முக்கிய காரணியாகும். துறைமுகத்தின் பொருத்தமற்ற அமைவிடத்தால், கடல் நீரின் ஓட்டம் மாறி, கடல் அரிப்பு அதிகரிக்கிறது. அந்தவகையில் ஒலுவில் துறைமுகம் அல்லது துறைமுக அதிகார சபை கடலரிப்பை தடுக்க பல்வேறு  நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது

அந்தவகையில் துறைமுகத்தின் அருகில் கடலரிப்பு தடுப்பு சுவர்கள் மற்றும் பாறைகளை அமைக்க வேண்டும், துறைமுகத்தின் செயல்பாட்டால் ஏற்படும் கடல் மாசுபாட்டைக் குறைக்க திட்டங்களை நடைமுறைப் படுத்தவேண்டும், துறைமுகத்தின் செயல்பாட்டால் ஏற்படும் கடல் மட்ட உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், துறைமுகம் மற்றும் உள்ளூர் சமூகங்கள் இடையே சிறந்த உறவை கட்டியெழுப்பி அடிகடி நிகழும் அமைதியின்மை, நம்பிக்கையின்மை மற்றும் பய உணர்வு உள்ளிட்ட வெற்றை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போது தான் சுமூகமான தீர்வுக்கான நம்பிக்கையின் கதவுகள் திறக்கும்.

அது போலவே அரசுடன் இணைந்து அரசியல்வாதிகள், சமூக அமைப்புகள், பல்கலைக்கழகம் உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த தரப்பினர்  குறித்த அழிவில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் நோக்கில் ஒன்றிணைந்து துரிதமாக செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

No comments:

Post a Comment