Thursday, 25 August 2016

நாட்டார்கலைகளைப் பேணுவதில் முஸ்லிம்கள் அசமந்தம்:--எழுகவி_ஜெலீல்

தமது நாட்டார் கலை இலக்கிய வடிவங்களைப் பேணிப் பாதுகாப்பதில் முஸ்லிம்கள் அசமந்தமாக இருக்கிறார்கள் என்கிறார் கிழக்கு இலங்கையைச் சேர்ந்த எழுகவி ஜெலீல் (49) “நாட்டார் பாடல்களுக்கு ஆசியரியர்கள் இல்லை” எனும் பொது நியதியை தகர்த்து “அரை நிலை நாட்டார் பாடல்கள்” எனும் புது வடிவத்தினை இலங்கையின் கிழக்குப் பகுதியில் முன்கொண்டு செல்கிறார் ஜெலீல்.
முஸ்லிம் கலை, இலக்கியப் பாரம்பரியம் மிக்க தென்கிழக்குப் பிராந்தியத்தின் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் வாழ்பவர்தான் இவர் , நாட்டார் பாடல்களை சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல பாடுவதிலும் அதனைப் பாதுகாத்துத் தொகுதியாக்குவதிலும் 35வருடங்களுக்கு மேலாக தன்னை ஈடுபடுத்தி வருபவர்.
இதுபோன்ற நாட்டுப்புற இலக்கிய வடிவங்களில் ஈடுபாடுள்ளவர்களும் அந்தத் துறையில் தேர்ச்சி பெற்றவர்களும் கிழக்கில் மட்டுமல்ல முழு இலங்கையிலுமே மிகவும் அரிதாகவே காணப்படுகின்றனர். இதன் காரணமாகவும் ஏனைய அதி நவீன வடிவிலான கலை, இலக்கியப் போக்கினாலும் நாட்டுப்புற இலக்கிய வடிவங்கள் அழிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவரைச் சந்தித்துக் ~கட்டுமரம் இணையத்தளத்திற்காகப் பேசினோம்.
கேள்வி: கலை. இலக்கியப் பரப்பில் எத்தனையோ துறைகள் இருக்கக் குறிப்பாக “நாட்டார் இலக்கியம் அல்லது நாட்டார் பாடல்களை” தெரிவு செய்தமைக்கான காரணம்?
பதில்: நாட்டார் கலை, இலக்கியம் என்பது பரந்துபட்ட உலகம். அதில் நாட்டார்(கவி) பாடல்கள் தொடர்பிலேயே நான் செயற்பட்டு வருகிறேன்.
இப்போது இருக்கின்ற அனைத்துக் கலை, இலக்கிய வடிவங்களுக்கும் “நாட்டுப்புறம்”தான் பூர்வீகமாய் இருக்கின்றது. நாட்டார் கலை, இலக்கியங்களையோ அல்லது நாட்டார் பாடல்களையோ எடுத்துச் செல்ல மற்றும் அதில் தனது திறமைகளைக் காட்டப் படித்துப் பட்டம் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. அவை இயற்கையோடும் உணர்வுகளோடும் சம்பந்தப்பட்டவை. நான் எனது தாயின் தாலாட்டுப் பாடல்களையும், எனது கிராமத்தின் அழகையும் உள்வாங்கி, கேட்டு வளர்ந்தவன். அந்த வகையில் நாட்டார் பாடல்கள் எனது இரத்தத்துடன் கலந்துவிட்டது.
கேள்வி: உங்களைப் போன்று இந்தத் துறையில் ஈடுபாடு காட்டுபவர்கள் இந்தப் பிதேசத்தில் உள்ளனரா?
பதில்: இந்தப் பகுதியில் நாட்டார் பாடல்களை எழுந்தமாறாகப் பாடக்கூடியவர்கள் நான் அறிந்த வகையில் சிலரே உள்ளனர். அந்த வகையில் மீரா உம்மா, கலுங்கர் ரபாத்தும்மா, மாமனாப் போடி போன்றவர்கள் இருந்தார்கள். இப்போது மீரா உம்மா மாத்திரமே உயிருடன் உள்ளார். இவர் பாடுவதோடு விட்டுவிடுவதால் ஆவணப்படுத்தப்படாமல் விடப்படுகிறது.
படித்த தரப்பில் மர்ஹூம் (எஸ்;.எச்எம்.ஜெமீல்,) எஸ்.முத்துமீரான் மற்றும் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ், மணிப்புலவர் மஜீத் போன்றவர்கள் தங்களை நாட்டாரியல் ஆய்வாளர்களாக அடையாளப்படுத்தினார்கள். இவர்கள் சில நாட்டார் பாடல்களைப் புத்தகமாக்கியுமுள்ளனர். ஆனால் நாட்டார் பாடல்களைப் பாடுவதோடு அவற்றைத் தொகுதியாக்குபவர்கள் இந்தப் பகுதியில் என்னைத் தவிர வேறு யாருமில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் நமது தொன்மைகளையும், பாரம்பரியத்தையும் மற்றும் வரலாற்றையும் உணர்வு பூர்வமாகத் தன்னகத்தே கொண்டுள்ள இந்த நாட்டார் இலக்கிய வகைகளைப் பாதுகாத்து அடுத்தடுத்துவரும் சந்ததிகளுக்கும் கிடைக்கச் செய்யவேண்டும் என்பது எனது அவா.
#கேள்வி: நாட்டார் பாடல்களை எப்படிப் பாதுகாத்து அடுத்து வரும் சந்ததியினருக்குக் கையளிக்க முடியும் என நினைக்கின்றீர்கள்?
பதில்: இளைஞர்கள் நமது நாட்டார் கலை, இலக்கிய வடிவங்களைக் கற்று ஆராய்ச்சி செய்து புதிய வடிவங்களில் ஆவணப்படுத்துவதோடு சம காலங்களுக்குப் பொருந்தக்கூடிய வடிவங்களில் நாட்டார் கலை, இலக்கியப் பாரம்பரியத்தினை மீண்டும் உருவாக்க வேண்டும்.
மேலை நாடுகளில் செய்யப்பட்டு வருவது போலப் பல்கலைக்கழகங்களில் “நாட்டார் கலை, இலக்கியப் பாரம்பரியங்களை ஆராய்ச்சி செய்து, பேணிப் பாதுகாத்துக் கற்பிக்கும் அல்லது அத்துறையில் பட்டம் வழங்கும் பிரிவுகளை உருவாக்க வேண்டும்.
இன்றைய அதி நவீன இலத்திரனியல் ஊடக வளர்ச்சியின் ஊடாக நாட்டார் கலை இலக்கியப் பாரம்பரியங்களை ஆவணப்படுத்தும் மற்றும் மீள உருவாக்கும் புதிய முயற்சிகள் ஏற்படுத்தப்படவேண்டும்
அரசும், கலாசார அமைச்சு மற்றும் திணைக்களங்கள் நாட்டார் கலை, இலக்கியப் பாரம்பரியங்களைப் பாதுகாக்கும் முறையானதும் தொடர்ச்சியானதுமான செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும்.
பாடசாலை மாணவர்களுக்குக் கற்றல் சாரா செயற்பாடுகளுக்கு நாட்டார் கலை, இலக்கியச் செயற்பாடுகளை உள்வாங்கவேண்டும். அப்படியான செயற்பாடுகள் மூலமாகத்தான் நாட்டாரியலைப் பாதுகாத்துக் கொண்டுசெல்ல முடியும் என நினைக்கிறேன்.
கேள்வி: நாட்டார் கலை, இலக்கியங்களைப் பாதுகாத்துக் கொண்டுசெல்வதில் உங்களுடைய பங்கு என்ன?
பதில்: ஆயிரம் பாடல்களை நான் பாடி அவற்றைப் புத்தகங்களாகத் தொகுக்க வேண்டும் என எண்ணியிருந்தேன் ஆரம்பத்தில். ஆயிரத்திற்கும் மேலாகப் பாடல்களைப் பாடியும் வந்துள்ளேன் “தண்ணீருக்கு வந்த தாகம் 2013”, “புழுதி மண் (பதிப்பில்;)” போன்ற தொகுதிகளை ஆக்கியுள்ளேன். விரைவில் ஏனையவைகளையும் தொகுதியாக்க முயற்சிக்கிறேன்.
கேள்வி: நேர்காணலின் இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்: நான் பாடசாலை மொழித் தினப் போட்டிகளுக்காகவும் மாணவ மன்ற நிகழ்ச்சிகளுக்காகவும் மாணவர்களை நாட்டார் பாடல்கள் பாடுவதற்குப் பயிற்றுவிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறேன். அத்தோடு எங்களுடைய பிராந்தியத்தில் நடைபெறும் கலை, இலக்கிய நிகழ்வுகள் மற்றும் பொது நிகழ்வுகளில் சந்தர்பத்திற்கு ஏற்றாப்போலப் பாடல்களைப் பாடியும்வருகிறேன். ஆனால் தமிழ் மொழியிலான நாட்டார் பாடல்களின் வளர்ச்சி குறித்துத் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும் சிங்கள ஆசிரியர்கள் சிந்திக்கும் அளவுகூடத் தமிழைத் தங்களின் தாய் மொழியாகவும் போதனாமொழியாகவும் கொண்ட நமது ஆசிரியர்கள் சிந்திப்பதில்லை, செயற்படுவதில்லை என்பதையிட்டுக் கவலையடைகிறேன்.
நாட்டார் கலை, இலக்கிய வடிவங்களில் முஸ்லிம்களின் கலை, இலக்கிய வடிவங்கள் தனித்துவமானவை. ஆனால் ஏனைய சகோதர இன மக்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவற்றைப் பேணிப் பாதுகாப்பதில் முஸ்லிம்கள் மிகவும் அசமந்தமாகவே தொடர்ந்தும் இருந்து வருகிறார்கள். இது தங்களின் மரபுரிமைக்கும், பாரம்பரியத்திற்கும் வரலாற்றுக்கும் செய்யும் அநீதியாகும்.
முஸ்லிம் நாட்டார் கலை, இலக்கிய வடிவங்களை ஆராய்ச்சி செய்து அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் சகோதர இன உறவுகள் காட்டும் ஆர்வம் சக முஸ்லிம் மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் ஒப்பீட்டளவில் குறைவு என்பது கவலைக்குரியது.
25.08.2016

No comments:

Post a Comment