யுத்தம், கலவரங்கள், சுனாமி மற்றும்
சூறாவளி எனத் தொடரும் அழிவுகளின் பின்னர் அபிவிருத்தி என்ற பெயரில் அரசுகளும் அரசசார்பற்ற நிறுவனங்களும் வீதிகள், பாலங்கள் கட்டிடங்கள் உள்ளிட்ட கண்களுக்குப் புலப்படும் பெரும் பெரும் பெளதீகக்கட்டு மானங்களில் கவனம் செலுத்தி பல்லாயிரம் கோடிபெருமதியான பொருளாதாரங்களையும் வளங்களையும் கொட்டி பல திட்டங்களை நடைமுறைப் படுத்துகின்றார்கள். இவற்றை யாருக்காக செய்கின்றார்களோ அந்தமக்களால் அதன் உச்ச கட்டபயனை அடைந்து கொள்ள முடியாத நிலையே பெரும்பாலும் காணக்கூடியதாகவுள்ளது.
இந்நிலைக்கு அடிப்படைக்காரணங்களாக கண்களுக்குப் புலப்படும் பெளதீக விடயங்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவங்களைப் போன்று நமது இருப்பிற்கும் அசைவியக்கத்திற்கும் மூலநாடியாக இருக்கும் அல்லது குறித்த அபிவிருத்திகளின் உச்சகட்ட பயனை நுகர்வதற்கான கண்களுக்குப் புலப்படாத உணர்வுகள் உள்ளிட்ட உளவியல் சார் அம்சங்களுக்கும் உள்ளிட்ட உளநலகட்டுமான அபிவித்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் கவனயீனமாக கடந்து போகமுனையும் செயற்பாடேயாகும்.
இலங்கையை பொருத்த மட்டில் சுமார் முப்பது வருட யுத்தம் மற்றும் கடல்சீற்றம் உள்ளிட்ட அழிவுகளைச்சந்தித்து இன்னும் மீண்டு எழ முடியாமல் தத்தளிக்கும் நிலையில் பெரும்பாலான மக்கள் இருக்கின்றார்கள். குறிப்பாக வடக்கு கிழக்கில் கடந்த காலயுத்தத்தின் தாக்கத்தையும் அதன் வடுக்களையும் இங்கு வாழும்மக்களின் அன்றாடவாழ்வில் காணமுடிகிறது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், அனாதையாக்கப்பட்ட பிள்ளைகள், அங்கவீனமாக்கப்பட்டவர்கள், பரம்பரைபரம்பரையாக உழைத்து சேர்த்து வைத்ததம் சொத்து சுகங்களையும் உயிர்களையும் யுத்தத்தின் கோர பசிக்கு இரையாக்கியவர்கள் என தொடரும் பட்டியலில் இன்றும் பெரும்பாலான மக்கள் மனக்கவலையுடனே வாழ்கிறார்கள்.
அவர்களின் மனங்களில் துன்பம், கவலை, கோபம், சந்தேகம், சோர்வு, ஏக்கம், நம்பிக்கையின்மை எனமறையான உணர்வுகளையே பெரும்பாலும் காணக்கூடியதாகவுள்ளன.
அரசாங்கமும் அரசசார் பற்றநிறுவனங்களும் உளவியல்மேம்பாடு சார்ந்த பல செயற்பாடுகளை செய்துவந்தாலும் அவற்றின்பலன்கள் பாரியளவுகாணக் கூடியதாக இல்லை.
இதன் காரணமாகவே அரசாலும் அரச சார் பற்ற நிறு வனங்களாலும் மேற்கொள்ளப்படும் பாரியளவான பெளதீக அபிவிருத்திகளின் நோக்கங்கள் நிறைவேறாமல் விரயமாகின்றன. இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவுக்குவந்து சுமார்பத்து ஆண்டுகள் கடந்தநிலையில்,மக்களின் மனநிலையிலான முன்னேற்றதில்படிப்படியான முன்னேற்றம் காணப்பட்டாலும் முழுமையாக அடையமுடியவில்லை என்பதிலிருந்து அம்மக்கள் இன்னும் மனவடுக்களுடனே வாழ்ந்துவருகின்றார்கள் என்பது தெளிவாகின்றது.
எனவே மக்கள் மத்தியில் ஆரோக்கியமான உடல், உள நிலைகளை மேம்படுத்தும் திட்டங்கள் பரவலாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் முறையாக உளவளத்துறையில் கல்விகற்றுகளத்தில் செயற்படுவோரின் வீத மானதுசேவையினை நாடுவோருடன் ஒப்பிடும்போது மிககுறைவாகவே காணப்படுகின்றது.
இதற்கு பலகாரணங்களை குறிப்பிடலாம், இளைஞர்களிடையே இத்துறை தொடர்பாககாணப்படும் தெளிவின்மைமற்றும் ஆர்வமின்மை, இலங்கையில் இத்துறைக்கு காணப்படும் அங்கீகாரத்தின் தன்மை, மொழிரீதியான பிரச்சினைகள், ஈடுபட்டுள்ள சேவைவழங்குவோரின் தகுதிமற்றும் அவர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டியபயிற்சிகளின் இடைவெளி என பலகாரணங்களை குறிப்பிடலாம்.
ஆகவே அரசாங்கம் இத்துறையில் கல்வி கற்க எமது இளம் சமூகத்தினை ஊக்குவிக்கவும் அதுதொடர்பான விழிப்புணர்வு மற்றும் தொழில் வாய்ப்புக்களை மேம்படுத்தவும் முன்வரவேண்டும்.
மேலும் உளவளத்துறைச் சேவைகளுக்கு வழங்கும் முக்கியத்துவத்தினை அரசு இன்னும் கிராம மட்டங்களில் அதிகரிக்கவேண்டும்.
அதே போல் மக்களிடமும் உளவளத்துறைச் சேவைகள் சம்பந்தமான விழிப்புணர்வினை அதிகரித்து இச்சேவைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வழிகளை இலகுபடுத்த வேண்டும். வடுக்கள் மற்றும் வலிகளிலிருந்து மக்களை மீட்டெடுத்து உடல் உள ஆரோக்கியத்துடனான மக்களை நிலைபேறுடைய அபிவித்திகளூடாக முன்கொண்டு செல்வதன் மூலமாகவே நாட்டை வீண் விரயமற்ற வளர்ச்சிப்பாதையில் வெற்றிகரமாக பயணிக்கச்செய்யமுடியும்.
இக் கட்டுரையானது குடும்பபுனர்வாழ்வு நிலையம்(FRC) மற்றும் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம்(SDJF) இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் உளநல வாழ்வினை பாதிக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மேற்கொள்ளும் உளநல விழிப்புணர்வு செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக எழுதப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-எம்.ஏ.எம்.முர்ஷித்
Article 09: 24.01.2020
Virakesari – online (24.01.2020)
https://www.virakesari.lk/article/74013
Pakalavan – Online (30.01.2020)
https://pakalavan.com/?p=26426
The Nation - online (11.02.2020)
http://www.thenation.lk/2020/02/blog-post_11.html
நன்றி: Rif D Nawas
No comments:
Post a Comment